சென்னை | 50 மின்சார ரயில்கள் ரத்து., ஜனவரி மாதம் வெளியாகும் புதிய அட்டவணை... பொதுமக்களின் கோரிக்கை.!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள், பொதுப் போக்குவரத்துக்காக அதிகம் நம்பியிருப்பது மின்சார ரயில்களைத்தான். ஆனால், ஓராண்டுக்கு முன், பராமரிப்புப் பணிகளுக்காக 50 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், சென்னை புறநகர் மின்சார ரயில்களில் தினமும் கூட்டம் நிரம்பி வழியும் சூழல் காணப்படுகிறது. இதில், பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைவதோடு, அடிக்கடி விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர். இந்த நிலையில், அடுத்தாண்டு முதல் வாரம் வெளியாகவுள்ள ரயில்வே புதிய கால அட்டவணையில், ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட ரயில்களை மீண்டும் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் வழித்தடத்தில் இரவு 11.50, 12 மணிக்கு இயக்கப்பட்ட ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் தற்போதைய அட்டவணைப்படி, இந்த வழித்தடங்களுக்கு இரவு 11.20 மணிக்கு தான் கடைசி ரயில் இயக்கப்படுகிறது. இந்த நேர மாற்றத்தால், இரவு நேரங்களில் வேலையை முடித்துவிட்டு வீடுகளுக்கு திரும்புவோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், அவர்கள் வேறு வழியே இல்லாமல் கூடுதலாக கட்டணம் செலவழித்து ஆட்டோ அல்லது கால் டாக்சிகளில் பயணிக்கின்றனர்.
இதேபோல், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் விரைவு மின்சார ரயில்களும் தற்போது குறைந்தளவிலேயே இயக்கப்படுகின்றன. இதனால், இந்த வழித்தடங்களில் பயணிப்பவர்களும் தினமும் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் சூழல் காணப்படுகிறது. எனவே பழையபடி மின்சார ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

