நட்சத்திர தொகுதி| திருச்சியில் திமுகவின் வெற்றி தொடருமா..? யார் கை ஓங்கும்..?
2021 தேர்தலில் 9 தொகுதிகளையும் வென்ற திமுக, திருச்சியில் பல்வேறு சமூகங்களின் ஆதரவை பெற்றுள்ளது. அதிமுகவின் முனைப்பும், திமுகவின் வலிமையும், திருச்சி தேர்தல் களத்தில் கடும் போட்டியை உருவாக்குகின்றன. திருச்ச்சியின் மணப்பாறை முதல் லால்குடி வரை முத்திரை பதித்துள்ளது திமுக.
மலைக்கோட்டையைத் தொடுபவர்க்கே ஜார்ஜ் கோட்டை என்ற எழுதப்படாத விதியை மெய்ப்பிக்கும் வகையில், ஒவ்வொரு தேர்தலிலும் திருச்சியில் இருந்தே அரசியல் கட்சிகள் பரப்புரையைத் தொடங்குகின்றன. திமுகவின் ஆதிக்கமும், இழந்த செல்வாக்கை மீட்கத் துடிக்கும் அதிமுகவின் முனைப்பும் இந்தத் திருச்சி தேர்தல் களம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மணப்பாறை தொகுதி: திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளில், காவிரி டெல்டாவின் நுழைவாயிலான மணப்பாறையில் சுமார் 2 லட்சத்து 90 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மனிதநேய மக்கள் கட்சியின் அப்துல் சமது உள்ளார். கவுண்டர் சமூகத்தினர் 24 சதவீதம் பெரும்பான்மையாக உள்ள இத்தொகுதியில், வன்னியர் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளும் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. மாட்டுச் சந்தைக்கும் முறுக்குத் தொழிலுக்கும் பெயர்பெற்ற இத்தொகுதியில் அதிமுக மற்றும் திமுக இடையே எப்போதும் நேரடிப் போட்டி நிலவும்.
ஸ்ரீரங்கம் தொகுதி: ஸ்ரீரங்கம் தொகுதியில் 3 லட்சத்து 11 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். சட்டமன்ற உறுப்பினராக திமுகவின் எம். பழனியாண்டி உள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி என்பதால் அதிமுகவின் செல்வாக்கு இங்கு எப்போதும் அதிகமாகவே இருக்கும். முத்தரையர் மற்றும் ஆதிதிராவிடர் சமூகத்தினர் அதிக அளவில் உள்ளனர்.
முசிறி தொகுதி: விவசாயம் செழிக்கும் முசிறி தொகுதியில் 2 லட்சத்து 33 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். திமுகவின் ந. தியாகராஜன் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இத்தொகுதியில், அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவும். முத்தரையர் மற்றும் வெள்ளாளர் சமூகத்தினர் கணிசமாக வாழும் இப்பகுதி, கோரைப்பாய் உற்பத்தி மற்றும் வாழை விவசாயத்திற்கு உலகப் புகழ்பெற்றது.
திருச்சி மேற்கு தொகுதி ; மாவட்டத்தின் தலைநகர் பகுதியான திருச்சி மேற்கு தொகுதியில் 2 லட்சத்து 59 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். செல்வாக்குமிக்க அமைச்சரான திமுகவின் கே.என். நேரு இங்கு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். முத்தரையர், முக்குலத்தோர் மற்றும் வெள்ளாளர் சமூகத்தினர் சமமான அளவில் உள்ள இத்தொகுதி, திமுகவின் மிக வலுவான தளமாகத் திகழ்கிறது.
திருச்சி கிழக்கு தொகுதி: வணிகர்களின் கூடாரமான திருச்சி கிழக்கு தொகுதியில் 2 லட்சத்து 55 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக திமுகவின் இனிகோ இருதயராஜ் பதவி வகிக்கிறார். வெள்ளாளர் சமூகத்தினருடன் இஸ்லாமிய மற்றும் கிறித்தவ சிறுபான்மையினர் அதிகம் வாழும் இத்தொகுதியில், வணிகர்களின் வாக்குகள்தான் வெற்றியாளரைத் தீர்மானிக்கின்றன.
மண்ணச்சநல்லூர் தொகுதி: சமயபுரம் மாரியம்மன் கோயில் அமைந்துள்ள மண்ணச்சநல்லூர் தொகுதியில் 2 லட்சத்து 65 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். சட்டமன்ற உறுப்பினராக திமுகவின் கதிரவன் பதவி வகிக்கிறார். கடந்த முறை திமுக கைப்பற்றியிருந்தாலும், அதற்கு முன்பு இது அதிமுகவின் ஆதிக்கத்தில் இருந்த தொகுதியாகும். முத்தரையர் மற்றும் ஆதிதிராவிடர் சமூகத்தினர் இங்கு அதிகம். அரிசி ஆலைகள் இத்தொகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளன.
திருவெறும்பூர் தொகுதி: தொழிலாளர்கள் நிறைந்த திருவெறும்பூர் தொகுதியில் 3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அமைச்சராக இருக்கும் திமுகவின் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்படும் இங்கு, முக்குலத்தோர் மற்றும் ஆதிதிராவிடர் சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். பாதுகாப்புத்துறை, பொதுத்துறை, அரசுத்துறை நிறுவனப் பணியாளர்கள் இத்தொகுதியின் வெற்றியை நிர்ணயிக்கிறார்கள்.
துறையூர் தொகுதி: மலைகளும் காடுகளும் நிறைந்த துறையூர் தனித் தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். திமுகவின் எஸ். ஸ்டாலின் குமார் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இத்தொகுதியில், முத்தரையர் சமூகத்தினருடன் மலைவாழ் பழங்குடியினரும் கணிசமாக உள்ளனர். பச்சைமலை சுற்றுலாத் தளம் மற்றும் மிளகு சாகுபடி இத்தொகுதியின் சிறப்பம்சங்களாகும்.
லால்குடி தொகுதி: செழிப்பான லால்குடி தொகுதியில் 2 லட்சத்து 18 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். திமுக அமைச்சரான கே.என். நேருவை தோற்கடித்த இதே தொகுதி மக்கள்தான், திமுகவை சேர்ந்த சௌந்தரபாண்டியனை 4 முறை வெற்றிபெறசெய்து, திமுகவின் கோட்டையாக வைத்துள்ளனர். முத்தரையர், உடையார் மற்றும் ஆதிதிராவிடர் சமூகத்தினர் வெற்றியை நிர்ணயிக்கும் இத்தொகுதி, நன்செய் விவசாயத்திற்கும் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கும் பெயர் பெற்றது.

