நட்சத்திர தொகுதி | 2021-ல் திமுக கோட்டையான திருவள்ளூர்.. இந்தமுறை யாருக்கு சிம்மாசனம்..?
2021 சட்டமன்றத் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தின் 10 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. கும்மிடிப்பூண்டி, பொன்னேரி போன்ற அதிமுக பாரம்பரிய கோட்டைகளும் உட்பட, திருத்தணி, திருவள்ளூர், பூவிருந்தவல்லி, ஆவடி, மாதவரம், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மாவட்டம் முழுவதும் திமுக ஆதிக்கம் உறுதியானது. இப்போது அதிமுக, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சவாலாக இருக்கிறது .
2021 சட்டமன்றத் தேர்தலில் பத்துக்குப் பத்து என, திமுக கூட்டணி முழுமையாகக் கைப்பற்றிய திருவள்ளூர் கோட்டையில், இம்முறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் கடும் சவாலை அளிக்கின்றன. தமிழ் மொழிக்கு அடுத்து தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிகமுள்ள எல்லைப் பகுதிகளில் தேர்தல் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
இம்மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூவிருந்தவல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய பத்து தொகுதிகள் உள்ளன. இதில் பொன்னேரி மற்றும் பூவிருந்தவல்லி ஆகிய இரண்டும் தனித்தொகுதிகளாகும். தற்போது ஒன்பது இடங்கள் திமுக வசமும், ஒரு இடம் காங்கிரஸ் வசமும் உள்ளன.
கும்மிடிப்பூண்டி தொகுதி: தமிழகத்தின் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டி, காலங்காலமாக அதிமுகவுக்குச் சாதகமாக இருந்துவந்தது. இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுக 7 முறை இங்கே வென்றுள்ளது. ஆனால், கடந்த தேர்தலில் அந்தப் பிம்பத்தை உடைத்தெறிந்தார் திமுகவின் டி.ஜே.கோவிந்தராஜன். சுமார் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பொன்னேரி தொகுதி: பொன்னேரி தனித்தொகுதியிலும் அதிமுக 7 முறை வென்று தனது ஆதிக்கத்தைச் செலுத்தியிருந்தது. ஆனால், கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் துரை சந்திரசேகர், கடும் போட்டிக்கு இடையே அதிமுகவை வீழ்த்தி, சுமார் 9000 வாக்குகள் வித்தியாசத்தில் 'கை' சின்னத்தின் பலத்தை நிரூபித்தார்.
திருத்தணி தொகுதி: ஆன்மீக பூமியான திருத்தணி தொகுதி, எப்போதும் கணிக்க முடியாத ஒரு களமாகவே இருந்துவருகிறது. கடந்த 25ஆண்டுகளில் பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனப் பல கட்சிகள் இங்கே வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும், கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட சந்திரன், சுமார் 29000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, திருத்தணி மக்களின் ஆதரவு திமுக பக்கமே என்பதை உறுதி செய்தார்.
திருவள்ளூர் தொகுதி: மாவட்டத் தலைநகரான திருவள்ளூர் தொகுதி, ஆரம்பத்திலிருந்தே திமுகவின் கோட்டையாக திகழ்கிறது. இதுவரை ஏழு முறை திமுக இங்கே வென்றுள்ளது. அந்தப் பாரம்பரியத்தைத் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தொடர்ந்துவருகிறார். கடந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணாவை எதிர்த்துப் போட்டியிட்டு, சுமார் இருபத்திரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் மீண்டும் வெற்றி பெற்றார்
பூவிருந்தவல்லி தொகுதி: பூவிருந்தவல்லி தனித்தொகுதி, கடந்த தேர்தலில் ஒரு மிகப்பெரிய சாதனையைப் பதிவு செய்தது. திமுகவின் கிருஷ்ணசாமி, சுமார் தொண்ணூற்று நான்காயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரைத் தோற்கடித்து, மாவட்டத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஆவடி தொகுதி: தொழிற்பேட்டைகள் நிறைந்த ஆவடி தொகுதி, ஒரு முக்கிய நட்சத்திரத் தொகுதியாகப் பார்க்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் சா.மு. நாசர், சுமார் ஐம்பத்தியைந்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஆவடி தொகுதியை திமுக வசமாக்கினார்.
மதுரவாயல் தொகுதி: சென்னை மாநகரின் எல்லையில் உள்ள மதுரவாயல் தொகுதியில், திமுகவின் காரப்பாக்கம் கே. கணபதி, முன்னாள் அமைச்சர் பெஞ்சமினை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அம்பத்தூர் தொகுதி: தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த அம்பத்தூர் தொகுதியில், திமுகவின் ஜோசப் சாமுவேல் தனது சிறப்பான களப்பணியால் சுமார் நாற்பத்திரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிமுகவின் பிடியிலிருந்து இத்தொகுதியை மீட்டார்.
மாதவரம் தொகுதி: மாவட்டத்தின் மிகப்பெரிய வாக்காளர் எண்ணிக்கையைக் கொண்ட தொகுதிகளில் ஒன்றான மாதவரம் தொகுதியில், திமுகவின் எஸ். சுதர்சனம் களம் கண்டார். முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தியை எதிர்த்துப் போட்டியிட்டு அவர் சுமார் ஐம்பத்தேழாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மாதவரத்தில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தக்கவைத்துக் கொண்டார்
திருவொற்றியூர் தொகுதி: இறுதியாக, திருவொற்றியூர் தொகுதி. இது சீமான் போன்ற முக்கியத் தலைவர்கள் போட்டியிட்டதால் மாநில அளவில் கவனிக்கப்பட்டது. ஆனால், திமுகவின் வலுவான அடித்தளத்தால் கே. பி. சங்கர், சுமார் முப்பத்தேழாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, திருவொற்றியூர் எப்போதும் திமுகவின் கோட்டைதான் என்பதை நிரூபித்தார்.

