சென்னை விமான நிலையங்களுக்கு அண்ணா மற்றும் காமராஜர் பெயர்கள் வைக்கப்படுமா?

சென்னை விமான நிலையங்களுக்கு அண்ணா மற்றும் காமராஜர் பெயர்கள் வைக்கப்படுமா?
சென்னை விமான நிலையங்களுக்கு அண்ணா மற்றும் காமராஜர் பெயர்கள் வைக்கப்படுமா?
சென்னை விமான நிலையத்தின் கட்டுமான மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் பணிகள் முடிந்த பின்னர், அவற்றுக்கு அண்ணா மற்றும் காமராஜர் பெயர் பலகை விமான நிலையத்தில் நிறுவப்படும் என சென்னை விமான நிலையத்தின் இயக்குனர் சரத் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு விமான பயணத்திற்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்தும், சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா கண்காணிப்பு பணிகள் குறித்தும் சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சென்னை விமான நிலையத்தின் இயக்குனர் சரத்குமார், “விமான நிலையத்தில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி, பயணிகள் சிரமப்படாதவாறு திட்டமிட்டு கொரோனா பரிசோதனைகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை எடுப்பதற்கு கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், குறைக்க வலியுறுத்தி பயணிகளிடம் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதை கருத்தில் கொண்டு, ரேபிட் பரிசோதனை கட்டணத் தொகை 3,400 ரூபாயிலிருந்து 2,900 என குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது விமான நிலையத்தில், அதிக கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து இங்கு வரும் பயணிகள் தனியாக பிரித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் எடுக்கப்படுகிறது. பயணிகள் சிரமப்படுவதை குறைக்கும் வகையில் ஆன்லைன் முறையில் கொரோனா பரிசோதனை செய்யும் வழிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைப்பயன்படுத்திக்கொண்டு, பயணிகள் ஆன்லைன் முன்பதிவுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வரும் பயணிகள், பரிசோதனை செய்து காத்திருக்கும் நேரத்தில் அவர்களின் வசதிக்காக தொலைக்காட்சி, வை-ஃபை, சிறந்த முறையில் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலைய வளாகத்தில் விற்கப்படும் உணவு பதார்த்தங்கள் தண்ணீர் பாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விகள் எழுகிறது. இவ்விஷயத்தில் இந்திய விமானத்துறை காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றியே பொருட்கள் விற்கப்படுகின்றன. இவற்றுடன் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டால் புகார் அழிப்பதற்கான இலவச எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு அறிஞர் அண்ணாவின் பெயர் மாற்றப்பட்டு உள்ளதா என்ற கேள்விக்கு, அவர் மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து தற்போது விமான நிலையத்தில் கட்டுமான மற்றும் விரிவாக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும், அவை முடிந்து அண்ணா பன்னாட்டு விமான நிலையம், காமராஜர் உள்நாட்டு விமான நிலையம் என பெயர் பலகைகள் வைக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com