மாறும் காட்சிகள்.. அதிமுக அப்படி செய்திருக்கக் கூடாது! ஜெயலலிதா இருந்திருந்தால்..!
2026 சட்டமன்ற தேர்தலுக்கான சூடு பற்றிக் கொண்டு வெகுநாட்கள் ஆகிவிட்டன. அனல் பறக்கும் பரப்புரைகள், கூட்டணிகள் கணக்குகள் எல்லாம் வேகமெடுத்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. யார் யாருடன் சேரப் போகிறார்கள், யாருக்கு மவுசு கூடிக் கொண்டிருக்கிறது எல்லாம் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தவெகவை எதிர்பார்த்திருந்த அதிமுக தற்போது ஏமாற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், காட்சிகள் தற்போது மாறிவிட்டது. என்ன நடக்கிறது விரிவாக பார்க்கலாம்.
கழட்டிவிட்டு மீண்டும் பாஜக உடன் கூட்டணி!
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த அதிமுக, 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை கழட்டிவிட்டது. ஆனால், வாக்கு சதவிதம் நாடாளுமன்ற தேர்தலில் குறைந்த நிலையில் மீண்டும் பாஜக உடன் கூட்டணியை அமைத்தது அதிமுக. கூட்டணி அமைத்து பல மாதங்கள் ஆகியும் இந்த கூட்டணி பெரிய அளவில் பலமாக மாறியதாக தெரியவில்லை. பாமக மற்றும் தேமுதிகவும் இந்த கூட்டணிக்கு வருவது இதுவரை உறுதியாகவில்லை.
அதனால், திமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க பாஜக மட்டும் போதாது என்று அதிமுக உணர்ந்துள்ளது. அதனால், தவெக தங்கள் கூட்டணிக்கு வந்தால் கண்டிப்பாக திமுகவை வீழ்த்திவிட முடியும் என்று அதிமுக நினைத்திருக்கிறது. தவெக, அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக பேச்சுகள் அடிப்பட்டாலும் பெரிய அளவில் டேக் ஆஃப் ஆகவில்லை. அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது.
தவெகவுக்காக கனவு கண்ட அதிமுக!
இத்தகைய சூழலில்தான் கரூர் துயர சம்பத்திற்கு பிறகு தவெகவுக்கு ஒரு வித நெருக்கடி உருவானது. 41 பேர் பலியான சம்பவத்திற்கு தவெகதான் காரணம், விஜய் தாமதமாக வந்ததுதான் காரணம் என்று கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தது. அப்பொழுது அதிமுக களத்தில் இறங்கி திமுக அரசை கடுமையாக எதிர்த்தது. அதனைவிட தவெகவுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்தது. கரூர் சம்பவ வழக்கும் சிபிஐ வசம் சென்றது.
அந்த தருணத்தில் நிச்சயம் அதிமுக - பாஜக கூட்டணிக்கு தவெக வரும் என்ற பேச்சு அதிகமாக அடிபட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமியும் பெரிய வாய்ப்பு கொடுத்தார். அதிமுக கூட்டத்தில் தவெக கொடிகள் காணப்பட்டது, அது கூட்டணிக்கான பிள்ளையார் சுழி என்று வெளிப்படையாக பேசினார். அது அதிமுக - தவெக கூட்டணி குறித்து பேச்சுகளுக்கு கூடுதல் வலுசேர்த்தது. இருப்பினும், தவெக தரப்பில் தொடர்ந்து மவுனம் காக்கப்பட்டது. எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அதிமுக தலைவர்கள் பலரும் தங்கள் விருப்பங்களை தெரிவித்து வந்தபோதும் தவெக தரப்பில் கண்டுகொள்ளப்படவில்லை.
தகர்ந்து போனது அதிமுகவின் கனவு!
இந்நிலையில்தான், கரூர் துயர சம்பத்திற்கு முன்பு இருந்த அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம் என்று தவெக தரப்பில் கடந்த வாரம் சொன்ன போதே இந்த கூட்டணி கனவு தகர்ந்துவிட்டது. அதேபோல், சமீபத்தில் நடந்த தவெக பொதுக்குழுவில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என்று விஜய் மீண்டும் உறுதி செய்திருந்தது மேலும் அந்த கூட்டணி கனவை தரை மாட்டமாக்கியது.
இத்தகைய சூழலில்தான் தவெக உடனான கூட்டணி விவகாரத்தில் அதிமுக அளவுக்கதிகமாக இறங்கிவந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அது தற்போது ஏமாற்றத்தில் முடிந்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் மூத்த பத்திரிகையாளர் மணி விரிவாக பேசியிருக்கிறார்.
தவெகவை அதிமுக ஏன் இவ்வளவு தூரம் ஆதரிக்கணும்?
மணி பேசுகையில், “தனி நபர்கள் ஆகட்டும் ஸ்தாபனம் ஆகட்டும், பலவீனமாக இருக்கலாம், ஆனால் பலவீனத்தை காட்டக் கூடாது. திரும்ப திரும்ப எடப்பாடி பழனிசாமி காண்பித்துக் கொண்டார். சட்டசபையில் அவ்வளவு தூரம் தவெகவை பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? முதல்வர் ஸ்டாலின் கேட்ட கேள்வி நியாயமானது. உங்க கட்சிக்காரங்களை கூட இவ்வளவு பாதுகாத்து பேசவில்லை அவரை ஏன் பாதுகாத்து பேசுகிறீர்கள்? என்று அவர் கேட்டது சரியான கேள்வி. விஜய் இதுவரை தேர்தலில் தன்னுடைய பலத்தை நிரூபிக்கவில்லை. விஜய்யிடம் சில பிரச்னைகள் இருக்கிறது. நல்ல அரசியல் கட்சி தலைவராக விஜய் இன்னும் வர வேண்டியிருக்கிறது. அவர் இன்னும் பக்குவம் ஆகவில்லை. வரும் காலங்களில் அவர் ஆகலாம்.
எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல, கட்சியும் அவசரப்பட்டு விட்டது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் கரியை அள்ளி பூசிக் கொண்டது. ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடக்குமா? தேர்தல் களத்திற்கு புது வீரர் வரார், முதலில் அமைதியாக அவரை கவனியுங்கள். எல்லோரும் சேர்ந்து அவரை விமர்சிக்கும் பொழுது அவர் தரப்பு நியாயத்தை பேசுவது சரிதான். ஆனால் அளவுக்கு அதிகமாக அவரை நீங்க பாதுகாக்க முயன்றது எங்கு வந்து நிற்கிறது பாருங்கள். கரூர் சம்பத்திற்கு பிறகு நெருக்கடியை சமாளிக்க அதிமுக - பாஜக கூட்டணியில் சேருவார் என்றே நினைத்தேன். அதிமுகவிடம் இந்த நினைப்பு அதிகமாகவே இருந்தது. நம்மை வந்து விஜய் காப்பாற்றுவார் என்றே நினைத்தார்கள். விஜய் அதிமுக கூட்டணிக்கு வரமாட்டார் என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அதிமுகவை குறைத்து மதிப்பிட முடியாது. அதனிடம் 20 சதவிதம் வாக்கு இருக்கிறது. பாஜக கூட்டணியும் கூடவே இருக்கிறது. ஏன் அவசரப்பட வேண்டும். 2011-ல் ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் தேவைப்பட்டார். ஆனால் அவர் இப்படி அதனை கையாளவில்லையே” என்றார்.
விமர்சனத்தை தொடங்கிய அதிமுக..
தவெக உடனான கூட்டணிக்கு இனி வாய்ப்பு இல்லை என்று தெரிந்துவிட்ட நிலையில், அக்கட்சிக்கு எதிராக அதிமுகவினர் விமர்சனங்களை முன்வைக்க தொடங்கிவிட்டனர். இதுநாள் வரை மிகத்தீவிரமாக ஆதரித்து வந்த அதிமுகவினர் தற்போது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளனர். ஊடகங்களில் வரும் செய்தி தொடர்பாளர்களும் தவெகவை விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.
“மக்களோடு நேரடியாக தொடர்பு இல்லை; சினிமாவில் நடித்ததை வைத்துக்கொண்டு, ஒரு பெரிய கட்டமைப்பை உருவாக்கிவிட்டதுபோல தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டு, தேர்தல் களத்திற்கு வருகிறார்கள்” என்று தவெக தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சித்துள்ளார் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி.
இதே தவறை செய்த சீமான்.. பாடம் கற்காத அதிமுக!
தவெக கட்சி ஆரம்பித்த தருணத்தில் வெளிப்படையாகவே நாம் தமிழர் கட்சியினரும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜய்யை ஆதரித்து வந்தனர். கூட்டணிக்கான விருப்பத்தையும் தெரிவித்தனர். தம்பி தம்பி என சீமானே பேசி வந்தார். இதில் என்ன சிக்கல் ஆனது என்றால் தொடர்ந்து கூட்டணியே இல்லை என்று தனித்து தனித்துவமாக அதுவரை இருந்துவந்தார் சீமான். அன்றைய நேரத்திற்கு விஜய்யை விட அனுபவம் வாய்ந்த தலைவர் சீமான் தான். நேரடியாக சீமான் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தி இருக்கத் தேவையில்லை.
ஆனால், அன்று நாதக சற்றே இறங்கி வந்ததுபோலவும் தவெக உடன் கூட்டணியை எதிர்பார்த்தது போலவே தெரிந்தது. ஆனால், விக்கிரவாண்டி மாநாட்டிற்கு பிறகு தவெக கொள்கைகள் அறிவிக்கப்பட்ட பிறகு எல்லாம் மாறியது. நாதக பின் வாங்கியது. நாதக உடன் தவெக கூட்டணி அமைக்க வாய்ப்பு குறைவு தான் என்று எல்லோருக்கும் புரியும். ஆனால் நாதக அவசரப்பட்டு விட்டது. அந்த மாதிரிதான் தற்போது அதிமுகவும், எடப்பாடி பழனிசாமியும்....
தன் மீது நம்பிக்கை வைக்குமா அதிமுக?
கட்சிக்குள் எவ்வளவு சிக்கல்கள் வந்தாலும் எல்லவற்றையும் கடந்து தேர்தலை நோக்கி முன்னோக்கி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி என்பது அதிமுகவுக்கு தேவை தான். ஆனால், 150 இடங்களில் அதிமுக போட்டியிடுவதற்கு பங்கம் வராமல் இருக்க வேண்டும். பாமக, தேமுதிகவை சரிகட்டும் முயற்சியில் அதிமுக முழு கவனம் செலுத்தினாலே போதுமானது. இரட்டை இலை என்ற மிகப்பெரிய அஸ்திரம் அதிமுகவிடம் இருக்கிறது.
கடந்த முறை 10 ஆண்டுகள் ஆட்சியின் எதிர்ப்பு மனநிலை., உட்கட்சி பிரச்னைகள் இருந்த போதும் 65 இடங்களுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்றது. தற்போது அதே நம்பிக்கையுடன் அதிமுக களமிறங்கினால் நிச்சயம் 80 - 90 இடங்கள் உறுதியாக அடிக்கலாம். அதற்கு மேல் என்பது இன்னும் வேறு எதாவது அதிமுக செய்ய வேண்டும். எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக அதிமுக தன்னுடைய தலைமைத்துவத்தை ஒரு நூலளவு கூட விட்டுக் கொடுக்கக் கூடாது. அதுதான் அதிமுகவின் பலம்.

