குடியிருப்பு பகுதிகளில் ஜோடியாக உலா வரும் பாகுபலி யானை - அச்சத்தில் மக்கள்

குடியிருப்பு பகுதிகளில் ஜோடியாக உலா வரும் பாகுபலி யானை - அச்சத்தில் மக்கள்
குடியிருப்பு பகுதிகளில் ஜோடியாக உலா வரும் பாகுபலி யானை - அச்சத்தில் மக்கள்

குடியிருப்புகள் நிறைந்த வீதிகள் வழியே உலா வரும் காட்டு யானைகளை கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் மீண்டும் பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் துவங்கியுள்ள நிலையில், தற்போது இந்த யானை மேட்டுப்பாளையம் நகரை ஒட்டியுள்ள சமயபுரம், ஓடந்துறை, தாசம்பாளையம் என மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் நடமாடி வருகிறது..

இதுவரை தனியாக சுற்றி வந்த பாகுபலி யானை கடந்த சில நாட்களாக தன்னுடன் இன்னொரு யானையையும் சேர்த்துக் கொண்டு உலா வருகிறது. இந்த இரு ஆண் யானைகளும் சூரியன் மறைந்து இருள் சூழ துவங்கியதும் வனத்தை விட்டு வெளியேறி சாலைகளை கடந்து நெருக்கமான குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள வீதிகளில் சுற்றி வருகின்றன.

இதையடுத்து அருகில் தென்படும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்குள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், பாகுபலி யானையை, கும்கி யானைகளை பயன்படுத்தி விரட்டவும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் முயன்ற வனத்தறையினரின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் நகரை ஒட்டியுள்ள சமயபுரம் என்னுமிடத்தில் மாலை ஆறு மணிக்கு மேல் எந்த நேரத்திலும் திடீரென சாலையை கடந்து ஊருக்குள் நுழைவதும் பின்னர் வெளியேறுவதுமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எந்த நேரத்தில் என்ன நிகழுமோ என்ற அச்சத்திலேயே இருப்பதாக கூறும் இப்பகுதி மக்கள் சர்வ சாதாரணமாக மக்கள் நடமாட்டமுள்ள வீதிகளில் உலா வரும் காட்டு யானைகளை அடர்ந்த காட்டுக்குள் அனுப்ப வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com