
கோவை மாவட்டம் ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகிறது. இந்நிலையில் மருதமலைக்குச் செல்லும் பக்தர்கள் மலைப் பாதையில் நடந்து செல்ல மாலை 5 மணிக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை அதேபோன்று இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதி. வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மருதமலை அடிவாரம் ஐஓபி காலனி பகுதியில் யானை தாக்கி குமார் என்பவர் உயிரிழந்த நிலையில், வனத்துறையினர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். இந்நிலையில் வனத் துறையினர் ஒலிபெருக்கி மூலம் யானை நடமாடும் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மருதமலை சாலையில் உள்ள ஐ.ஓ.பி காலனி பகுதியில் யானை கூட்டம் சாலையோரம் முகாமிட்டுள்ள நிலையில் வனத்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.