விவசாய தோட்டத்தினுள் நுழைய முயன்ற காட்டு யானை பாகுபலி: கட்டுப்படுத்த திணறும் வனத்துறை

விவசாய தோட்டத்தினுள் நுழைய முயன்ற காட்டு யானை பாகுபலி: கட்டுப்படுத்த திணறும் வனத்துறை
விவசாய தோட்டத்தினுள் நுழைய முயன்ற காட்டு யானை பாகுபலி: கட்டுப்படுத்த திணறும் வனத்துறை

லாவகமாக கம்பி வேலியை சாய்த்து விவசாய தோட்டத்தினுள் நுழைய, காட்டு யானை பாகுபலி முயற்சித்தது. வனத்துறையினர் பாகுபலி யானையை கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகின்றனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒற்றை ஆண் யானை ஒன்று சுற்றி வருகிறது. அதன் பிரம்மாண்ட உருவம் காரணமாக பாகுபலி என்றழைக்கப்படும் இந்த யானை, இரவானால் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாகி விட்டது. அதனால் இந்த யானையை, கும்கி யானைகளின் உதவியோடு சுற்றி வளைத்து பிடித்து அதன் கழுத்தில் ரேடியோ காலர் கருவியை பொருத்த வனத்துறை எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக வனத் துறையினரின் பிடியில் சிக்காமல் போக்குகாட்டி வரும் பாகுபலி யானை நேற்றிரவு வனத்தை விட்டு வெளியேறி மேட்டுப்பாளையம் நகரை ஒட்டியுள்ள ஊமப்பாளையம் என்னுமிடத்தில் சாலையில் சாவகாசமாக நடந்து சென்றது. அப்போது சாலையோரம் இருந்த விவசாய தோட்டமொன்று, பாகுபலியின் கண்ணில் படவே அதனுள் நுழைந்து பயிர்களை உண்ண முயற்சித்தது.

ஆனால் தோட்டத்தை சுற்றி சுமார் 12அடி உயரம் வரை வலுவான இரும்புக் கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்ததால் அதனால் சுலபமாக நுழைய முடியவில்லை. இதனையடுத்து முதலில் இரும்பு கம்பங்களுக்கு நடுவே கட்டப்பட்டிருந்த கம்பிகளை தனது முன்னங்கால்களால் தரையோடு தரையாக அழுத்தி பிடித்து கொண்டது. பின்னர் தனது தும்பிக்கை மற்றும் தந்தங்களால் இரும்பு கம்பங்களை கீழே சாய்க்க முயன்றது.

ஆனால், தனது கால்களால் மிதித்து கொண்டிருந்த கம்பிகள் இரும்பு கம்பத்தோடு இணைக்கப்பட்டிருந்ததால் கம்பம் சாயவில்லை. யானைகள் நுழைவதை தடுப்பதற்காகவே அமைக்கப்பட்டிருந்த வலுவான வேலியின் கம்பிகளை கால்களில் அழுத்தியபடியே வெகு லாகவமாக கம்பத்தையும் சாய்க்க முயன்றது பாகுபலி யானை.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் யானையை விரட்ட சப்தமிட்டனர். ஆனால் யானை யாரையும் கண்டுகொள்ளவில்லை. அதன் முயற்சி வெற்றி பெறும் முன் வனத் துறையினரின் யானை விரட்டும் குழுவினர் வந்து விட்டதால் பாகுபலி யானை அங்கிருந்து நகர்ந்து சென்றது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் யானை அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com