குழந்தையின் படிப்புக்கு பணம் கேட்ட மனைவி கொலை - கணவருக்கு வலைவீச்சு
குழந்தையின் படிப்பு செலவிற்கு பணம் கேட்ட மனைவியை கத்தியால் குத்தி கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தனசேகர் (37), இவரது மனைவி அகிலா(32). இருவருக்கும் திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. திருமணம் ஆகி 3 மாதத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். தரமணியில் தனது அண்ணன் வீட்டில் அகிலா வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று மதியம் 3 மணியளவில் கணவரின் வீட்டிற்கு குழந்தையின் படிப்பு செலவிற்கு பணம் கேட்க அகிலா சென்றுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றி கணவன் கத்தியை எடுத்து மனைவியின் தலை, மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில் மனைவி அகிலா ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்தார்.
மனைவியை கொலை செய்து விட்டு தனசேகர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தகவலறிந்து அங்கு சென்ற நீலாங்கரை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.