எப்ப பாரு போதை: கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி
மது அருந்திவிட்டு, போதையில் தொடர்ந்து தகராறு செய்த கணவர் மீது, கொதிக்கும் எண்ணெயை, பெண் ஒருவர் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள ஆபத்தானபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி. இவருக்கு, தவமணி, தமிழ்மணி என இரண்டு மனைவிகள். நேற்று மாலை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் முகம் முழுவதும் வெந்துபோன நிலையில் கணபதி அனுமதிக்கப்பட்டார். அப்போது, தன் மீது இரண்டு பேர் அமிலம் வீசியதாகத் தெரிவித்தார். இதை நம்பிய போலீசார், தீவிர விசாரணை நடத்தியபோது உண்மை வேறாக இருந்திருக்கிறது. தன்னை விட்டு பிரிந்து சென்று சேரக்குப்பம் கிராமத்தில் இருக்கும் இரண்டாவது மனைவி தமிழ்மணியின் வீட்டிற்கு அவ்வப்போது செல்லும் கணபதி, போதையில் தகராறு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், நேற்றும் அதே போல், தமிழ்மணியின் வீட்டிற்குச் சென்ற கணபதி, போதையில் தொந்தரவு செய்துள்ளார். அப்போது, கோவிலுக்கு படைப்பதற்காக, வடை சுட்டுக்கொண்டிருந்த தமிழ்மணி, ஆத்திரத்தில், கொதிக்க கொதிக்க இருந்த எண்ணெய்யை, கணபதி மீது ஊற்றியுள்ளார் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.