மது அருந்த பணம் கேட்டு தகராறு: கணவரை வெட்டிக் கொன்ற மனைவி
ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகே மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட கணவரை வெட்டிக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகே உள்ள கொண்டுநல்லான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராமுத்தாய் எனபவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையான சின்னத்துரை, தினசரி குடித்துவிட்டு தகராறு செய்து வந்துள்ளார். இவர் மீது ஐந்திற்கும் மேற்பட்ட வழக்குகள், காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.
ராமுத்தாய் கூலிவேலைக்குச் சென்று குடும்பச்செலவுகளை கவனித்து வந்துள்ளார். சின்னத்துரை வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளை துன்புறுத்தி வந்துள்ளார். இந் நிலையில் நேற்று மது குடித்து விட்டு வந்த சின்னத்துரை, ராமுத்தாயிடம் மேலும் மது குடிக்க பணம் கேட்டு துன்புறுத்தினாராம். ஆனால் குடும்பச் செலவுக்கே போதாத நிலையில் பணம் தர மறுத்த சண்முகத்தாயையும் தனது இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்ய போவதாக அரிவாளுடன் நேற்று இரவு சின்னத்துரை மிரட்டியுள்ளார்.
ஆத்திரமடைந்த ராமுத்தாய் கணவரை கொலை செய்துவிட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பெருநாழி காவல்துறையினர் சண்முகத்தாயை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.