ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை - மனைவியின் தகாத உறவு காரணமா?
மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் ரஞ்சித்குமார். இவரது மனைவி சுபா. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் ரஞ்சித் குமார் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ரஞ்சித் குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த ரஞ்சித்குமார் மீட்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ‘ரஞ்சித் குமார் தனது மனைவி சுபாவை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சுபாவிற்கு பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த கொலையை மனைவி சுபா, பிரகாஷ் உள்ளிட்ட சிலரை வைத்து நிகழ்த்தியிருக்கலாம் எனவும் சந்தேகிப்படுகிறது’ என போலீசார் தெரிவிக்கின்றனர்.