திருமணமான 9 நாளில் கணவனின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மனைவி
கடலூர் மாவட்டத்தில் திருமணம் ஆன 9 நாளில் கணவரை புதுமணப் பெண் படுகொலை செய்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. அந்த பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாகாததால், சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த திருவதிகை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். சிற்ப கலைஞரான இவருக்கும், மணக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும், கடந்த 2-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணமான 9-ஆம் நாளான நேற்று முன்தினம், புதுமாப்பிள்ளை ரமேஷ், தலையில் பலத்த காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்த புதுமாப்பிள்ளை ரமேசின் தாயார் பிற்பகலில் ரேஷன் கடைக்கு சென்றிருந்த சமயத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால், புதுமணப்பெண்ணிடம், பண்ருட்டி காவல்நிலைய போலீசார் விசாரித்தனர். அடையாளம் தெரியாத மூன்று பேர், ரமேசை கொன்றதாக அவர் கூறினார்.
ஆனால், அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணையை தீவிரபடுத்த, பின்னர், கொலை செய்ததை, புதுமணப்பெண் ஒப்புக்கொண்டார். தனக்கு நடைபெற்ற திருமணத்தில் இஷ்டமில்லை என்றும், மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்றும், இதனாலேயே, குளவிக்கல்லை தலையில் போட்டுக், கொன்றதாக, புதுமணப்பெண்ணான சிறுமி போலீசில் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதையடுத்து, கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுமியை, சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.