பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜோதிடர் - தட்டிக்கேட்ட கணவர் குத்திக்கொலை
நாமக்கல் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜோதிடரை, தட்டிக்கேட்ட கணவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த தம்பதி கிருஷ்ணன் (55) - வசந்தா. நாச்சிபட்டியில் வசந்தா டைலரிங் கடை வைத்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த ராமசந்திரன் (30) என்பவர் ஜோதிடம், மாந்திரீகம் செய்தால் குடும்பம் மேன்மையடையும் எனக் கூறி கிருஷ்ணன் குடும்பத்திற்கு சில பூஜைகளை செய்ததாக கூறப்படுகிறது.
இதில் ராமசந்திரனுக்கும், வசந்தாவிற்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், வசந்தாவிற்கு போன் செய்து அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. இதனையறிந்த கிருஷ்ணன் தனது மனைவிக்கு தொல்லை கொடுத்த ராமசந்திரனை கண்டித்ததோடு, சில வாரங்களுக்கு முன் வெண்ணந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ராமச்சந்திரனை காவல் துறையினர் அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு ராமசந்திரன் மதுபோதையில் கிருஷ்ணன் வீட்டிற்கு, சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
போதையில் இருந்த ராமச்சந்திரனை கிருஷ்ணன் மிரட்டியுள்ளார். அப்போது ராமச்சந்திரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருஷ்ணனை வயிற்றில் குத்தியுள்ளார். இதில் நிலை தடுமாறி ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்துள்ளார். அருகில் வந்தவர்களையும் கத்தியைகாட்டி மிரட்டி விட்டு ராமசந்திரன் தப்பியுள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த கிருஷ்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் கிருஷ்ணன் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வெண்ணந்தூர் காவல்துறையினர் ஜோதிடர் ராமசந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.