‘45 சவரன் நகைகளுடன் தோழியோடு தலைமறைவான மனைவி’ - கணவர் புகார்
தனது மனைவி 45 சவரன் நகைகளுடன், அவரின் தோழியுடன் தலைமறைவாகிவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் கணவர் ஒருவர். திருமணமான எட்டே மாதத்தில், டிக்டாக் செயலியால் நடந்திருக்கிறது இந்த விபரீதம்.
தம்பதியான ஆரோக்கிய லியாவும், வினிதாவும் சிவங்கை மாவட்டம் கடம்பக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 8 மாதத்திற்கு முன் தான் திருமணம் நடந்தது முடிந்தது. மணமான 3 மாதத்திலேயே தனிக்குடித்தனம் சென்ற ஆரோக்கிய லியா, மனைவியை தனியே விட்டுவிட்டு சிங்கப்பூருக்கு பணிக்கு சென்றுவிட்டார்.
தனிமையில் இருந்த வினிதா, சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வமாக இருக்க ஆரம்பித்திருக்கிறார். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், டிக் டாக் செயலியில் சினிமா வசனங்களைப் பேசி வீடியோ பதிவிட்டிருக்கிறார் வினிதா. அதுதான் இந்த விபரீதத்தின் ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கிறது. ஒருகட்டத்தில் டிக் டாக் செயலியில் மூழ்கிப்போன வினிதாவுக்கு, திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்திருக்கிறது.
டிக் டாக்கில் துளிர்விட்ட இவர்களின் நட்பு, தொலைபேசி உரையாடலில் வேர்விட்டு, அசைக்கமுடியாத ஆலமரமாகிவிட்டது. அது, அபியின் புகைப்படத்தையும், பெயரையும் கைகளில் பச்சை குத்திக் கொள்ளும் அளவுக்கு சென்றிருக்கிறது. அதிர்ந்துபோன கணவர் சிங்கப்பூரில் இருந்து வினிதாவை கண்டித்திருக்கிறார். ஆனால் வினிதா கேட்பதாக தெரியவில்லை. உடனடியாக சிவகங்கை திரும்பிய அவர், வினிதாவுக்கு அறிவுரை கூறி, அவரின் தாய் வீட்டில் விட்டுச் சென்றிருக்கிறார்.
இந்நிலையில், வீட்டில் இருந்த 45 சவரன் தங்க நகையுடன், வினிதா தலைமறைவாகி இருப்பது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து புகார் அளித்துள்ள ஆரோக்கிய லியா, தோழியுடன் தலைமறைவாகியுள்ள தனது மனைவியை கண்டுபிடித்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.