“என் தாயை பார்க்க போகணும்”.. அனுமதி மறுத்த கணவன்.. சென்னையில் நேபாள பெண் விபரீத முடிவு
குடும்ப தகராறில் நேபாள நாட்டை சேர்ந்த இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை வடபழனி பூக்கார தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் நேபாள நாட்டை சேர்ந்த சக்ரா. இவர் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மஞ்சு(23). இவர்களுக்கு ஒரு வயது குழந்தை உள்ளது. மஞ்சுவின் தாயார் சிறுநீரகப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தாயாரை கவனித்துக்கொள்ள மருத்துவமனைக்கு செல்லக்கூடாது என தொடர்ந்து கணவர் சக்ரா குடித்துவிட்டு மஞ்சுவை அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்றிரவு சக்ரா பணிக்கு சென்ற நிலையில், வீட்டில் உள்ள மின்விசிறியில் மஞ்சு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குழந்தையின் அழுகை சத்தத்தைக் கேட்டு வீட்டருகே வசிப்போர் சென்று பார்த்தபோது மஞ்சு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் கருப்பழகன் என்பவர் அளித்த புகாரின்பேரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.