உதவித்தொகையில் அபராதம் விதிக்க தடை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
முதியோர் மற்றும் விதவைகள் ஓய்வூதியம் பெறுபவர்களின் வங்கிக்கணக்கில் குறைந்த பட்ச தொகை இல்லையென்றால் அபராதம் விதிக்க கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த லூயிஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதில் நெல்லையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரின் வங்கிக்கணக்கில் குறைந்த பட்ச தொகை இல்லை என்பதற்காக 350 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் இது பற்றி சம்பந்தப்பட்ட வங்கிக்கு புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அரசு வழங்கும் உதவித்தொகையில் வாழ்க்கை நடத்துபவர்களின் வங்கிக்கணக்கில் குறைந்த பட்ச தொகையை எதிர்பார்ப்பது ஏற்கத்தக்கதல்ல என்று லூயிஸ் குறிப்பிட்டிருந்தார். இதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அபராதம் விதிப்பதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முதியோர் மற்றும் விதவைகள் ஓய்வூதியம் பெறுபவர்களின் வங்கிக்கணக்கில் குறைந்த பட்ச தொகை இல்லை என்றால், அபராதம் விதிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இது குறித்து ரிசர்வ் வங்கி, மத்திய நிதித்துறை இணைச் செயலர், தமிழக சமூக நலத்துறை செயலர் ஆயோருக்கு நோட்டீஸ் அனுப்பவும், அவர்கள் பதில்மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.