சசிகலாவை பொதுச் செயலாளர் ஆக்கியது ஏன்? பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கம்
ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக்கினோம் என அதிமுக மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கமளித்தார்.
அதிமுகவின் கட்சிச் சட்டப்படி, பொதுச் செயலாளரை பொதுக்குழு தேர்வு செய்ய முடியாது எனவும் பொது உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் எனவும் பி.எச்.பாண்டியன் மற்றும் மனோஜ்பாண்டியன் கூறியிருந்தனர். இது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கமளித்தார். எம்ஜிஆர் திமுகவில் இருந்து பொதுக்குழு கூட்டி விலக்கப்பட்டார். அதன் பிறகு எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கிய போது, பொது உறுப்பினர்களுக்கு உரிமை அளிக்கும் விதத்தில் சட்டம் வகுத்தார் என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
ஆனால் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்ட போது, பொது உறுப்பினர்களைக் கூட்டி அவர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி பொதுச் செயலாளரைத் தேர்வு செய்ய அவகாசம் இல்லை. அதனால் பொதுக்குழு சசிகலாவை பொதுச் செயலாளராக பரிந்துரை செய்துள்ளது என அவர் விளக்கமளித்தார்.