சசிகலா தரப்பிற்கு தேர்தல் ஆணையம் முதலில் ஒதுக்கிய சின்னம், ஆட்டோ ரிக்ஷா. ஆனால் அதை ஏற்க அவர் தரப்பு மறுத்ததால் தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது.
அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்திற்கு சசிகலா, ஓபிஎஸ் தரப்பு உரிமை கொண்டாடி தேர்தல் ஆணையத்தை அணுகிய நிலையில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் நேற்று முடக்கியது. மேலும் கட்சியின் பெயரையும் இரண்டு தரப்பினரும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது.
மேலும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சின்னங்களில் தங்களுக்குப் பிடித்தமான மூன்றை பரிந்துரை செய்யலாம் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. அதன்படி சசிகலா தரப்பு இன்று தேர்தல் ஆணையத்தில், ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை முதலாவதாகவும், இரண்டாவதாகத் தொப்பி சின்னத்தையும் அதற்கடுத்தப்படியாக, கிரிக்கெட் சின்னத்தையும் டிக் செய்து கொடுத்தது. ஆட்டோ சின்னத்தை முதலாவதாக டிக் செய்துள்ளார்களே, அதைப் பெற நினைக்கிறார்கள் என எண்ணிய தேர்தல் ஆணையம் சசிகலா தரப்பினருக்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியது.
இந்தத் தகவல் சென்னையில் உள்ள டிடிவி தினகரன் தரப்பிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்தச் சின்னத்தில் உடன்பாடில்லாத டிடிவி தினகரன் தரப்பினர், சின்னத்தை மாற்றித் தர கோரிக்கை வைக்குமாறு டெல்லியில் உள்ள கட்சிக்காரர்களுடன் பேசினார். இதனையடுத்து அவர்கள் தேர்தல் ஆணையத்திடம், தொப்பி சின்னத்தை ஒதுக்கி கொடுங்கள் என கோரிக்கை வைத்தனர். அப்படியென்றால் அதற்கான கோரிக்கை கடிதத்தை வைக்கும்படி தேர்தல் ஆணையம் கூறியது. இதனையடுத்து தொப்பி சின்னம் சசிகலா தரப்புக்கு ஒதுக்கப்பட்டது.
ஆனால் ஓபிஎஸ் தரப்போ, மூன்று சின்னங்களைப் பரிந்துரை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இரட்டை விளக்கு மின்கம்பம் என்ற ஒற்றை சின்னத்தையை தேர்தல் ஆணையத்திடம் கேட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வைத்த கோரிக்கை படி அச்சின்னம் அந்ததரப்பிற்கு ஒதுக்கப்பட்டது.
ஓபிஎஸ் அணியின் கட்சிப் பெயர் “அஇஅதிமுக புரட்சித் தலைவி அம்மா” என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சசிகலா அணியின் கட்சி பெயர் “அஇஅதிமுக அம்மா” என வழங்கப்பட்டுள்ளது.