தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழிக்கானவை என அடையாளப்படுத்துவது ஏன்? - நீதிபதிகள் கேள்வி
60 ஆயிரம் கல்வெட்டுக்களும் தமிழுக்கானவை எனும் போது அதனை திராவிட மொழி கல்வெட்டுக்கள் என அடையாளப்படுத்துவது ஏன் என்று மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக்கோரி எழுத்தாளர் எஸ்.காமராஜ், மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு, இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர். தமிழக அரசுத்தரப்பில், முழு விபரங்களையும் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், " இந்தியாவில் கண்டறியப்பட்ட 1 லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் மொழிக்கானவை. அவ்வாறிருக்கையில் தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, 60 ஆயிரம் கல்வெட்டுக்களும் தமிழுக்கானவை எனும் போது அதனை திராவிட மொழி கல்வெட்டுக்கள் என அடையாளப்படுத்துவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசுத்தரப்பில், "அது அரசின் கொள்கை முடிவு" என பதிலளிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள்," அரசின் கொள்கை முடிவு எனினும் ஒன்றன் அடையாளத்தை மறைக்கும் வகையில் இருத்தல் கூடாது. அனைத்து மொழிகளும் முக்கியமானவை. ஆனால் அதனதன் முக்கியத்துவமும், சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டும்" என குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழக அரசுக்கு மிக முக்கியமான பணியாக இது அமையும் என குறிப்பிட்டனர்.
மத்திய அரசுத்தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், "கல்வெட்டியல் துறையில் போதுமான நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, மத்திய அரசு கல்வெட்டியல் துறையை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவது போல் தெரிகிறது. கண்டறியப்பட்டுள்ள 1 லட்சம் கல்வெட்டுகளில் சுமார் 60 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியைச் சார்ந்தவை. அவ்வாறிருக்கையில் மைசூரில் கல்வெட்டுக்களை ஏன் வைக்க வேண்டும்? கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் காவிரி பிரச்சனை இருக்கும் நிலையில் தமிழகத்திலேயே கல்வெட்டுகளை பாதுகாத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கலாமே? என கேள்வி எழுப்பினர்.