\
Why Has Tiruchendur Temple Banned Mobile Phones Starting July 1?
Tiruchendur Murugan Templeweb

ஜூலை 1 முதல் செல்போனுக்குத் தடை.. திருச்செந்தூர் கோயில் நிர்வாக அறிவிப்பின் பின்னணி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் செல்போன் பயன்படுத்துவதற்கான தடை தீவிரப்படுத்தப்பட உள்ளது.
Published on
Summary

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி, 2022 முதல் அமலில் உள்ள செல்போன் தடை, வரும் ஜூலை 1 முதல் மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. பொதுதரிசனம், ரூ.100 விரைவு தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வரிசை என அனைத்து பக்தர்களும் முழுமையாகச் சோதனை செய்யப்பட்டு, கைப்பேசிகள் இருந்தால் பறிமுதல் செய்யப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

செய்தியாளர் சுடலைமணி செல்வன்

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

Tiruchendur Murugan Temple
Tiruchendur Murugan Templeweb

கோயிலுக்குள் தரிசனம் செய்யும் பக்தர்கள் செல்போன்கள் கொண்டு சென்று மூலவரை புகைப்படம் எடுத்து அதைச் சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், நீண்டவரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் தங்களது ஆதங்கத்தைப் பதிவிட்டு வரும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 2022ஆம் ஆண்டு நடந்த பொதுநல வழக்கில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன்கள் பயன்படுத்துவதை தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் திருக்கோயிலுக்குள் செல்போன்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்துவதற்காக வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Tiruchendur Murugan Temple
Tiruchendur Murugan Temple

இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படும் பொது தரிசன வரிசை, ரூ.100/ விரைவு தரிசன கட்டண வரிசை, மூத்தக் குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை போன்ற அனைத்துப் பகுதிகளிலும், பக்தர்கள் முழுமையாகப் பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

எனவே, பக்தர்கள் கோயிலுக்கு வருகை தரும்போது தங்களது கைப்பேசிகளை, தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ தங்களது வாகனங்களிலோ, பாதுகாப்பாக வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்ய திருக்கோயிலுக்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tiruchendur Murugan Temple
Tiruchendur Murugan Templeweb

மேலும், பக்தர்கள், தமது செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காக ஆங்காங்கே கோயில் நிர்வாகம் சார்பில் செல்போன் பாதுகாக்கும் இடங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி பக்தர்கள் தங்கள் கைப்பேசிகளைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு தரிசனத்திற்குச் செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பரிசோதனையின்போது பக்தர்களிடம் கைப்பேசிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றைப் பறிமுதல் செய்து பாதுகாப்புப் பெட்டகங்களில் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Why Has Tiruchendur Temple Banned Mobile Phones Starting July 1?
வெள்ளை அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு.. கவனிக்க வேண்டிய முக்கிய பகுதிகள் என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com