மேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக ? திடீர் முடிவின் பின்னணி என்ன ?

மேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக ? திடீர் முடிவின் பின்னணி என்ன ?
மேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக ? திடீர் முடிவின் பின்னணி என்ன ?

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையே இன்னும் வெளியாகவில்லை, ஆனால், தமிழக அரசியல் களம் உள்ளாட்சி தேர்தல் குறித்த பேச்சுகளால் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளது. தற்போது, அடுத்தக்கட்ட பரபரப்பாக முக்கியமான செய்தி ஒன்று இன்று வெளியாகியுள்ளது. மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசரச் சட்டம் கொண்டுவருவதற்கு இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வெளியான தகவல்தான் அது. 

ஏன் இந்த செய்தி முக்கியமானது என்றால் ? உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக செய்திகள் கடந்த ஒருமாதமாக வெளியாகி வரும் நிலையில், மேயர் பதவி தொடர்பான செய்திகள்தான் அதிகம் இடம்பெற்றன. அதிமுகவிடம் பாஜக இத்தனை மேயர் பதவி கேட்கிறது, அதிமுகவிடம் தேமுதிக இத்தனை தேர்தல் மேயர் பதவி கேட்கிறது என்ற செய்திகள் தொடக்கத்திலே வெளியாகின. பாஜக இரண்டு மேயர் பதவியை கேட்பதாக அமைச்சர் ஜெயக்குமாரே கூறியிருந்தார்.

திமுக தரப்பில் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளராக உள்ள உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட வலியுறுத்தி அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மேயர் பதவிக்கு போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவெடுக்கும் என உதயநிதியும் நாசுக்காக பதிலளித்து இருக்கிறார். இளைஞரணிச் செயலாளர் பதவி கொடுத்ததற்கான விமர்சனங்களே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அதற்குள் மேயர் பதவியா என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன. 

இதுஒருபுறம் இருக்க சென்னை மாநகாராட்சி மேயர் பதவியே தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் என திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். உதயநிதி மேயர் பதவிக்கு போட்டியிடுவார் என்ற செய்திகள் வெளியான நிலையில், திருமாவளவன் இப்படியொரு கோரிக்கையை முன் வைத்துள்ளதும் பேசு பொருளாக ஆகியுள்ளது. சீமானும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இருந்தார்.

இப்படி மேயர் பதவி தொடர்பாக பல்வேறு செய்திகள் அடிபட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான், மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது என்ற முடிவுக்கு அதிமுக வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைமுக தேர்தல் என்றால் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். அவர்களை வார்டு கவுன்சிலர்களே தேர்ந்தெடுப்பார்கள். அதிமுக ஏன் இந்த திடீர் முடிவுக்கு வந்துள்ளது என்பது பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் கடைசியாக நடைபெற்ற 2011ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனைமாற்றி மறைமுக தேர்தலுக்கு மாற அதிமுக விரும்புகிறது. மறைமுக தேர்தல் மூலமாக மேயர் பதவிகள் முழுக்க கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும்.

அடுத்த மாதம் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தல் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதை தாண்டி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிருப்தி எதுவும் ஏற்படாமல் தேர்தலை கடக்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவியை தாண்டி மேயர், நகராட்சி மேயர் பேரூராட்சி தலைவர் பதவிகள் அனைத்தும் கட்சி சார்ந்தது. நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் பங்கேற்கும் இந்த தேர்தலில் கட்சி நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவும். அதேபோல், கூட்டணி கட்சி தலைவர்களையும் சமாளிக்க வேண்டும்.

மொத்தமுள்ள 15 மாநகராட்சி மேயர் பதவிகளில் பாஜக, பாமக, தேமுதிக என கூட்டணி கட்சிகள் குறைந்தபட்சம் இரண்டு மேயர் பதவிகளையாவது கேட்பது அதிமுகவுக்கு நெருக்கடியை கொடுப்பதாக கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு அதிக அளவில் கொடுத்துவிட்டால் இரண்டுவித சிக்கல்களை அதிமுக எதிர்கொள்ள வேண்டும். ஒன்று கட்சிக்குள் அதிருப்தி ஏற்படும். அப்படியும் சமாளித்து கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்தால் அவர்கள் வெற்றி பெறுவார்களா என்பது சந்தேகம்தான். மேயர் தேர்தலில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல. மக்களவை தேர்தல் முடிவுகளும் அதிமுகவுக்கு நிச்சயம் நினைவில் இருக்கும்.

அதனால், மறைமுக தேர்தல் என்றால் தங்களது கொஞ்சம் சாதகமாக இருக்கும் என அதிமுக நினைத்திருக்கலாம். தேர்தல் முடிந்தபின்னர் வெற்றி பெற்ற கவுன்சிலர்களை வைத்து மேயர்களை தேர்வு செய்வது அவர்களுக்கு எளிதாக இருக்கும். யாருக்கும் எவ்வித சிக்கலும் இல்லாமல் தேர்தலை கடந்துவிட்டு செல்ல வேண்டும் என்பதே தற்போதைக்கு அதிமுகவின் முக்கியமான நிலையாக உள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com