ஷோபன் பாபுவை தந்தை என உரிமை கோராதது ஏன்?: அம்ருதாவிடம் நீதிமன்றம் கேள்வி
ஜெயலலிதாவை தாய் என் உரிமை கோரும் அம்ருதா ஷோபன் பாவுவை தந்தை என உரிமை கோராதது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜெயலலிதா மகள் என்று உரிமை கொண்டாடி உச்சநீதிமன்றத்தில் பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் மனுத்தாக்கல் செய்தார். அதில் 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி, ஜெயலலிதாவுக்கு மகளாக பிறந்தேன். குடும்ப கவுரவத்தைக் கருத்தில் கொண்டு ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்ததை வெளியில் கூறவில்லை. ஜெயலலிதாவின் சகோதரியான ஷைலஜாவும் அவரது கணவர் சாரதியும் தம்மை தத்துப் பிள்ளையாக வளர்த்தனர். முதன் முதலில் ஜெயலலிதாவை 1996ஆம் ஆண்டு போயஸ் தோட்டத்தில் சந்தித்தேன். ஜெயலலிதா என் மீது அளவு கடந்த அன்பு செலுத்தினார். 1996 முதல் 2016ஆம் ஆண்டு வரை பலமுறை அவருடன் வீட்டில் தங்கியிருக்கிறேன். ஜெயலலிதா பெங்களூரு வரும்போதெல்லாம் என்னைச் சந்திப்பார். ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ விருந்தினர் பட்டியலை சோதித்தால் அவர் சந்தித்தை உறுதி செய்யலாம்.
ஜெயலலிதாவின் அறிவுறுத்தலின்படியே மஞ்சுளா என்ற எனது பெயரை வைஷ்ணவ பிராமண பெயரான அம்ருதா என மாற்றிக்கொண்டேன். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகே, தாம் ஜெயலலிதா பெற்றெடுத்த மகள் என தமக்கு லலிதா தெரிவித்தார்.
தான் ஜெயலலிதாவின் மகள்தான் என நிரூபிக்க அவரது உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி மதன் பி லோக்கூர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கர்நாடகா உயர்நீதிமன்றத்தை அணுகும்படி மனுதாரருக்கு அனுமதியளித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் மகள் என கூறும் அம்ருதா டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, ஜெயலலிதாவை தாய் என் உரிமை கோரும் அம்ருதா, ஷோபன் பாவுவை தந்தை என உரிமை கோராதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் அப்போலோ மருத்துவமனையில் ஏதும் உள்ளதா? எனவும் கேட்கப்பட்டது.