கேசி வீரமணி - பிரேமலதா சந்திப்பு
கேசி வீரமணி - பிரேமலதா சந்திப்புweb

திமுக பக்கம் சாயும் தேமுதிக..? தக்கவைக்க அதிமுக முயற்சி? பிரேமலதா உடன் கே.சி வீரமணி சந்திப்பு ஏன்?

தமிழக அரசியல் களம் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பெயர் பெற்றது. அந்த வகையில், தற்போது ஒரு சந்திப்பு, பெரும் அரசியல் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
Published on

செய்தியாளர் - வினிஷ் சரவணன்

2026 சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், இன்னும் ஏராளமான கட்சிகள் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்காமல் இருக்கின்றன. அந்த வகையில் தேமுதிக இம்முறை யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கடந்த மாதம் தேமுதிக பொருளாளர் சுதீஷ் காங்கிரஸ் கட்சியின் விழா ஒன்றில் பங்கேற்று, திமுக நிர்வாகிகளுடன் ஒரே மேடையில் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியது..

இதனைத் தொடர்ந்து 2 வாரத்திற்கு முன்பு முதலமைச்சரை அவரது வீட்டிற்கே சென்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தார். முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து நலம் விசாரிப்பதற்காக சென்றதாக பிரேமலதா கூறினாலும், முதன்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைய உள்ளதாக தகவல் வெளியாகின..

கேசி வீரமணி - பிரேமலதா சந்திப்பு
கேசி வீரமணி - பிரேமலதா சந்திப்பு

இது ஒரு புறம் இருந்தாலும் தற்போது பிரேமலதா விஜயகாந்த் தன்னுடைய முதல் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 

இந்த நிலையில் திருப்பத்தூரில் பரப்புரை மேற்கொண்டு வந்த பிரேமலதா விஜயகாந்தை திடீரென அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி சந்தித்துள்ளார்.

அப்போது தேமுதிக பொருளாளர் சுதீஷ் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். இதனால் அதிமுக தரப்பில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தேமுதிக உடன் தொடங்கப்பட்டிருப்பதாகப் பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பாகவே தேமுதிக எங்களுடன் தொடர்ந்து பயணிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர விரும்புகிறோம்...

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.வீரமணி, பிரேமலதாவை திருப்பத்தூரில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அந்த சந்திப்பு அதிமுக கட்சி நலனுக்காகவே நடந்தது. தேமுதிக எங்கள் கூட்டணியில் தொடர விரும்பினால் அதற்காக தயார் நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து தேமுதிகவின் முக்கிய நிர்வாகியுடன் கேட்ட போது, கே.சி.வீரமணி உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே! ஒவ்வொரு முறையும் பிரேமலதா திருப்பத்தூர் வரும் போது முன்னாள் அமைச்சர் கே சி வீரமணிக்கு சொந்தமான ஹோட்டல் ஹீல்ஸில் தங்குவது வழக்கம். ஹீல்ஸ் ஹோட்டலில் தங்கும் போதும் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மரியாதை நிமித்தமாக பிரேமலதா விஜயகாந்தை சந்திப்பார். சிறிது நேரம் கலந்துரையாடுவார். 

அதன்படியே நேற்று நடந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே... இந்த சந்திப்பின் போது அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை.. தற்போது வரை தேமுதிக எந்த கூட்டணியிலும் இல்லை.. கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது.. ஜனவரி மாதம் கடலூரில் நடக்கும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பை பிரேமலதா வெளியிடுவார் என கூறினார்..

பிரேமலதா
பிரேமலதாpt desk

தேமுதிகவுக்கு கொடுக்கப்பட வேண்டிய மாநிலங்களவை எம்பி பதவி 2026ல் நிச்சயம் கொடுக்கப்படும் என அதிமுக உறுதிப்பட தெரிவித்தாலும், திமுக உடன் தேமுதிக தற்போது நட்பு பாராட்டி வருவதும் திமுக ஆட்சியை பிரேமலதா பெரிதும் விமர்சிக்காமல் கடந்து செல்வதும் திமுக உடன் அதிக இணக்கம் காட்டுவதுமாக உள்ளார் பிரேமலதா..

எனவே திமுக பக்கம் மெல்ல சாயும் தேமுதிகவை தன் பக்கம் இழுக்க அதிமுக மேற்கொள்ளும் முயற்சி கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com