அடுத்தடுத்து பாஜக தலைவர்களை சந்திக்கும் நடிகர் ரஜினிகாந்த் - பின்னணி என்ன?

இமயமலை சென்ற ரஜினிகாந்த் உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுர்யாவை சந்தித்துள்ளார். மேலும் பல பாஜக தலைவர்களையும் சந்தித்துள்ளார். இதன் பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம்..!

திரைப்பிரபலங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சுற்றுலா ரசனை உண்டு. சிலருக்கு கண்கவரும் உலகநாடுகள் பிடிக்கும். சிலருக்கோ தொலைதூர பயணம் பிடிக்கும். இதில் நடிகர் ரஜினிகாந்த் கொஞ்சம் ஸ்பெஷலானவர். மனதில் மலைபோல் சுமை அதிகரித்தால், இமாலயத்தை நோக்கி மலை ஏறுவதுதான் அவரின் ஸ்டைல். 20 ஆண்டுகளுக்கு மேலாக இமயமலை சென்றுவரும் ரஜினி, வழக்கமான உற்சாகத்தோடு பயணத்தை இம்முறையும் நிறைவு செய்திருக்கிறார்.

இமயமலை என்றாலே குஷியாகிவிடும் ரஜினி, 72 வயதிலும் இளைஞரைப்போல் உற்சாகத்துடனும், குழந்தையின் மகிழ்ச்சியுடனும் பயணம் மேற்கொள்கிறார். இமயமலை பயணத்தின்போது குடும்பத்தினர் யாரையும் ரஜினி தன்னோடு அழைத்துச் செல்லமாட்டார், மாறாக அவரின் நண்பர்களான ஹரி, வெங்கட், மூர்த்தி ஆகியோர் பயணத்தில் இடம்பெறுவார்கள்.

Rajini meets BJP Leaders
4 வருடங்களுக்கு பின் இமயமலைக்கு செல்லும் ரஜினி!

சுமார் 10 நாள் பயணத்தில் ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை என முக்கிய ஆன்மிகதலங்களை ரஜினி தரிசித்துள்ளார்.

பாபாஜி குகைக்கு செல்ல சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மலையில் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.. செங்குத்தாக இருக்கும் அந்த மலைப் பாதையின் வழியில், இளைப்பாறுவதற்கு ஒரே ஒரு இடம் மட்டுமே இருக்கும்.. அந்த இடம் வரை நடந்தே சென்ற ரஜினிகாந்த், முழு உற்சாகத்துடன் நடந்து குகையை அடைந்திருக்கிறார்.

அவரின் முந்தைய பயணங்கள் குறித்த அனுபவத்தை ரஜினிகாந்தின் நண்பர் அர்ஜுன மூர்த்தி விவரிக்கையில், "மன உறுதியும், மகிழ்ச்சியும் ரஜினியை பயணம் செய்ய வைக்கிறது. சவாலான மலைப் பகுதியில் சளைக்காமல் பயணம் செய்துள்ளார்" என்கிறார்.

ரஜினியின் வருகையை அறிந்த உத்தராகண்ட் முதலமைச்சர், அவருடன் ப்ரத்யேக பயிற்சி பெற்ற காவலர்களை அனுப்பி பாதுகாப்பு அளித்துள்ளார். இப்பயணத்தில் ரஜினி செல்போன் வைத்திருக்காததால் அவரை யாரும் நேரடியாக தொடர்புகொள்ள முடியாது. உடன்செல்லும் நபர்களை அழைத்தால் மட்டுமே அவரைத் தொடர்பு கொள்ள முடியும்.

செல்லும் இடங்களில் உள்ள ஆசிரமங்களில் தங்கும்போது, அங்கு வழக்கமாக என்ன உணவு கிடைக்குமோ அதைத்தான் ரஜினியும் உண்பார். ஆசிரமத்தை விட்டு வெளியே சென்றுவிட்டால் சாலையோர கடைகள்தான் அவரின் பசிபோக்கும் விருப்பமான உணவகங்களாக உள்ளன. தள்ளுவண்டி கடைகளை விரும்பும் ரஜினிகாந்த், டீ முதல் டிஃபன் வரை அங்கேயே சாப்பிடுவார். ரஜினியை அறிந்து கொண்ட சில கடைக்காரர்கள், மரியாதை நிமித்தமாக அவரிடம் பணம் வாங்காமல் அன்புச் சண்டையிட்ட நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன.

Rajini meets BJP Leaders
உத்தரப்பிரதேச முதல்வரிடம் கோரிக்கை வைக்க இருக்கும் ரஜினி? செய்தியாளர் கேள்விக்கு கலகல பதில்!

அடுத்து உத்தரபிரதேசம் சென்றுள்ள ரஜினி அங்கு துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுர்யாவுடன் ஜெயிலர் படம் பார்த்தார். பின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தையும் ரஜினி சந்தித்தார். அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய நிகழ்வுதான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

தொடர்ந்து இன்று அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலிலும் தரிசனம் செய்ய ரஜினி திட்டமிட்டுள்ளார். அன்பின் நிமித்தமான சந்திப்புகளுக்கு இடையே அவர் பாஜக தலைவர்களை சந்திக்கும் நிகழ்வு பல்வேறு யூகங்களுக்கு காரணமாகியிருக்கிறது.

யோகி ஆதித்யநாத், ரஜினிகாந்த்
யோகி ஆதித்யநாத், ரஜினிகாந்த்ani

வழக்கமாக இமயமலை பயணம் முடிந்தபின் சென்னை திரும்பும் ரஜினி, இம்முறை ஜார்க்கண்ட் - உத்தராகண்ட் - உத்தரப்பிரதேசம் என வழியில் பாஜக தலைவர்களை சந்தித்து அவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி வருகிறார். பலரை நேரிலும் சந்தித்துள்ளார். இது ரஜினியின் பாஜக சார்பு நிலைப்பாட்டை இது காட்டுகிறது என ஒரு சாரார் கூறும் நிலையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என மற்றொரு தரப்பினர் விளக்கமளித்துள்ளனர்.

நீண்ட பயணத்துக்குபின் தமிழகம் திரும்ப இருக்கும் ரஜினிகாந்தை வரவேற்பதற்காக காத்திருக்கிறது, தமிழ்நாடு!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com