மயான அமைதி, ஆளில்லா வீதிகள்! கிரானைட் குவாரிக்காக ஒருகிராமமே தனியார் வசம்; மதுரை அருகே பகீர் சம்பவம்

மதுரை அருகே உள்ள கிராமம் குண்டாங்கல், இக்கிராமமானது தற்பொழுது, மயான அமைதியுடன் பயனற்று வனாந்தரமாக பாழ்பட்டு கிடக்கிறது.
குண்டாங்கல்
குண்டாங்கல்PT

மதுரை அருகே உள்ள கிராமம் குண்டாங்கல். இக்கிராமமானது தற்பொழுது ஒரு தனியார் வசம் இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆம் கிரானைட் குவாரிக்காக ஒரு கிராமத்தையே மிகக்குறைந்த விலைக்கு வாங்கிய சம்பவம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு மதுரைக்கு அருகே அரங்கேறி உள்ளது.

மதுரை அருகே உள்ள கிராமம் குண்டாங்கல், இக்கிராமமானது தற்பொழுது, மயான அமைதியுடன் பாழடைந்து கிடக்கும் வீடுகள், மனிதர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கும் தெருக்கள், அரசு அமைத்து கொடுத்த மேல்நிலை குடிநீர் தொட்டி என அனைத்தும் பயனற்று வனாந்தரமாக பாழ்பட்டு கிடக்கிறது.

மதுரையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இக்கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வந்துள்ளனர். விவசாயமும் கால்நடைத்தொழிலும் இக்கிராமத்தில் பிரதான தொழிலாக நடந்து வந்து இருக்கிறது. வருமானம் குறைவாக இருந்தாலும் சொந்த ஊரில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்து இருக்கின்றனர், இந்த கிராம மக்கள்.

இச்சூழ்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு கிரானைட் குவாரிக்கு அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது. இதை அறியாத கிராம மக்களிடம், குவாரியின் உரிமையாளர்கள், ”குவாரியில் கல் உடைக்கும் பொழுது அது உங்கள் வீட்டின் கூரையின் மேல் விழுந்தால் வீடானது விரிசல் விழக்கூடும், தவிரவும் உயிரிழப்பும் ஏற்படும்” என்று அச்சத்தை ஏற்படுத்தி அவர்களை அவசர அவசரமாக அக்கிராமத்தை விட்டு வெளியேற்றி இருக்கின்றனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் “ பிஆர்பி (கல் குவாரி) ஆட்கள் எங்கள் இருப்பிடத்தை சுற்றியும் உள்ள இடத்தை விலைக்கு வாங்கிவிட்டதால், எங்களை கட்டாயப்படுத்தி பல லட்சம் மதிப்பு பெறும் எங்கள் இடத்தை மிக சொற்ப பணத்தை எங்களிடம் தந்து எங்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி விட்டனர். எங்களின் பிரச்சனையை சரி செய்ய எந்த அதிகாரிகளும் முன் வரவில்லை” என்று தெரிவிக்கின்றனர் கிராம மக்கள்.

சிதிலமடைந்து இருக்கும் இக்கிராமமானது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாக கூறுகின்றனர் அங்கிருப்பவர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com