‘காவேரி கூக்குரல்’ நிதியை நிர்வகிப்பது யார் ? - ஈஷா அறிவிப்பு

‘காவேரி கூக்குரல்’ நிதியை நிர்வகிப்பது யார் ? - ஈஷா அறிவிப்பு
‘காவேரி கூக்குரல்’ நிதியை நிர்வகிப்பது யார் ? - ஈஷா அறிவிப்பு

‘காவேரி கூக்குரல்’ இயக்கத்தின் மூலம் பெறப்படும் நிதியை தங்கள் அறக்கட்டளை நிர்வகிக்காது என ஈஷா அறிவித்துள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், காவேரி நதிக்கு புத்துயிரூட்டவும் ‘காவேரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ளார். இவ்வியக்கத்தின் மூலம் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் காவேரி வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் மரக் கன்றுகள் உற்பத்தி செய்வதற்காக பொதுமக்களிடம் இருந்து ஒரு மரக் கன்றுக்கு ரூ.42 என்ற முறையில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு பெறப்படும் கோடிக்கணக்கான நிதியை ஈஷா அறக்கட்டளை நிர்வகிக்க போவது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கு பதிலாக, ஓய்வுப் பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அரிஜித் பஷயத் (சூழலியல் பாதுகாப்புக்காக வலுவான சட்டப் போராட்டம் நடத்தியவர்), பத்ம பூஷண் விருது பெற்ற பிரபல பெண் தொழில் அதிபரும், பயோகான் நிறுவனத்தின் தலைவருமான கிரண் மசூம்தார் ஷா (டைம் பத்திரிக்கை வெளியிட்ட உலகளவில் ஆளுமைமிக்க பெண் தொழில் முனைவோர் பட்டியலில் இடம்பெற்றவர்), உலக வன உயிர் நிதியத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரி ரவி சிங், மத்திய நீர் வளம் மற்றும் நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறையின் முன்னாள் செயலாளர் சசி சேகர், மத்திய வேளாண் துறையின் கீழ் இயங்கும் சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தக அமைப்பின் முன்னாள் மேலாண் இயக்குநர் பிரவேஷ் சர்மா, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்னாள் துணை தலைவர் பி.முத்துராமன், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். கிரண் குமார், கர்நாடக அரசின் முன்னாள் கூடுதல் தலைமை செயலர் டி.என்.நரசிம்ம ராஜூ, இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் (சிஐஐ) இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி ஆகிய 9 பேர் அடங்கிய குழு தான் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்தின் நிதிகளை நிர்வகிக்க உள்ளது. மேலும், வரவு செலவுக் கணக்குகளை தணிக்கை செய்வதற்காக மதிப்புமிக்க ஒரு தணிக்கை குழுவும் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com