இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்ன சொல்லப் போகிறது தேர்தல் ஆணையம்?
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் அதிமுகவினர் மத்தியில் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ற கேள்விதான் முக்கியமான கேள்வியாக எழுந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தனர்.
இதற்கு பதில் அளிக்க, தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு, சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், பதில் அளித்திருந்தார். அதை ஏற்காத தேர்தல் ஆணையம், மார்ச் 10-ம் தேதிக்குள் சசிகலா பதில் அளிக்கும்படி தெரிவித்தது.
அதன்படி கடந்த 10ம் தேதி, சசிகலா தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில், கட்சியின் பொதுக்குழுதான் தன்னை பொதுச்செயலாளராகத் தேர்வு செய்தது என்றும் அதிமுக தேர்தல் விதிகளுக்கு உட்பட்டே அனைத்து நியமனங்களும் நடந்தது என்றும் தற்போது தனது நியமனத்தை எதிர்ப்பவர்களே அந்தப் பதவிக்கு தன்னை முன்மொழிந்தவர்கள் என்றும் அதில் விதிமீறல் எதுவும் நடக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.
இம்மனுவிற்கு பதில் அளிக்கும்படி பன்னீர்செல்வம் அணிக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி, தங்கள் விளக்கத்தை 61 பக்கம் கொண்ட மனுவாக அவர்கள் தாக்கல் செய்தனர். அதில், ‘பொதுக்குழுவுக்கோ, செயற்குழுவுக்கோ பொதுச் செயலாளரை நியமிக்கும் அதிகாரம் கிடையாது. தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியே அதிமுகவில் கிடையாது. இதன் அடிப்படையில் சசிகலா நியமனம் செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. இரு அணிகளுமே இரட்டை இலைச் சின்னத்தைப் பெற கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. கட்சியையும் ஆட்சியையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சசிகலா அணியிடம்தான் தற்போது இரட்டை இலைச் சின்னமும் உள்ளது. ஆனால் சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதே செல்லாது எனக் கோரி பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ள சூழ்நிலையில், ஆணையம் என்ன முடிவு செய்யும் என்பதைப் பொறுத்துத்தான் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது முடிவாகும்.
மேலும் தேர்தல் ஆணையம் சசிகலா தேர்வு செல்லும் என அறிவித்தால் மட்டுமே ஆர்கே நகர் தொகுதி வேட்பாளர் அறிவிப்பை அவர் செய்ய முடியும்.
சசிகலா தேர்வு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிக்கும் பட்சத்தில் ஆர்.கே.நகரில் வேட்பாளர் அறிவிப்பை கட்சியின் சார்பில் யார் அறிவிப்பது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையில் தான்தான் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு எனக் களமிறங்கியுள்ள தீபா, சுயேச்சையாகப் போட்டியிட இருப்பதால், அவர் இரட்டை இலைச் சின்னத்திற்கான போட்டியில் இல்லை.