சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி T.ராஜா ஓய்வு: அடுத்த தலைமை நீதிபதி யார்?

பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த T.ராஜாவை ஏற்கெனவே ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது.
பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த T.ராஜா
பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த T.ராஜாPT Desk

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி T.ராஜா இன்று பணி ஓய்வு பெறுகிறார். இதனால் தற்போது மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அடுத்த பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Madras High Court
Madras High CourtTwitter

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த முனீஷ்வர்நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி பணி ஓய்வு பெற்றதையடுத்து, அப்போது மூத்த நீதிபதியாக இருந்த T.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அதன்பின் T.ராஜாவை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது.

ஆனால், அவரை இடமாறுதல் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். மேலும் அவரும் தனது இடமாறுதலை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை வைத்தார். அவற்றை பரிசீலித்த மத்திய அரசு, தொடர்ந்து அவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பணியாற்ற அனுமதித்தது.

எஸ்.வைத்தியநாதன்
எஸ்.வைத்தியநாதன்PT Desk

இதன்மூலம் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் 8 மாதங்களாக பொறுப்பு தலைமை நீதிபதியாக அவர் பதவி வகித்து வரும் நிலையில், தற்போது அவருக்கு 62 வயது நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, இன்றுடன் அவர் ஓய்வுபெற உள்ளார். அவருக்கான பிரிவு உபசார விழா உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது.

பொறுப்பு தலைமை நீதிபதியாக T.ராஜா பதவியில் இருந்த காலத்தில், உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 13 கூடுதல் நீதிபதிகளுக்கும், கூடுதல் நீதிபதிகளாக இருந்து நிரந்தர நீதிபதிகளான 5 நீதிபதிகளுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் பொறுப்பு தலைமை நீதிபதியான T.ராஜா பணி தற்போது ஓய்வு பெறவுள்ளதால், புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை, அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள மூத்த நீதிபதியான எஸ்.வைத்தியநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற கொலீஜியம் மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலாவை, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி பரிந்துரைத்துள்ளது. தற்போது கொலீஜியத்தின் இந்தப் பரிந்துரையை ஏற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com