5 மணிநேரம் ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது - அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக செயற்குழுவில் 5 மணிநேரம் ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மேயர் சிவராஜன் 129 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மின்ட் தங்க சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின், கடம்பூர் ராஜூ, சரோஜா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,
''வேளாண் சட்டம் பொறுத்தவரை எந்த விவசாயிக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது. அரசியல் காரணங்களாலும் காழ்புணர்ச்சியாலும் வேளாண் சட்டத்தை வைத்து திமுக அரசியல் செய்து வருகிறது. உதயநிதி ஸ்டாலின் அரசியல் நாகரிகம், பண்பாடு கருதி பேச வேண்டும். ஒரு தறுதலைக்கு தான் மற்றவர்களை பார்க்கும்போது தறுதலை போன்ற எண்ணம் வரும்.
அதிமுக செயற்குழுவில் 5 மணிநேரம் ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது. ஜனநாயக ரீதியான ஆரோக்கியமான விவாதம் இருந்தது. செயற்குழுக் கூட்டத்தில் சசிகலா குறித்து விவாதிக்கப்படவில்லை விவாதிக்க வேண்டிய அவசியமும் இல்லை. முதல்வர் வேட்பாளர் குறித்து ஏழாம் தேதி அறிவிப்பு வரும் என்று சொல்லியிருக்கிறார்கள். இது குறித்து மேலும் சொல்ல முடியாது. அக்டோபர் 7-இல் ஒரு முடிவு தெரியும்.