இவரு அந்த சுகேஷாம்ல! கையில ஏகப்பட்ட வழக்கு வச்சிருக்காராம்!
டெல்லியில் 1.30 கோடி ரூபாய் ரொக்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரா, உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கு தாம் உறவினர் என கூறிக்கொண்டு கடந்த காலத்தில் பலரையும் ஏமாற்றியிருப்பதும் அவருக்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் 50க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த 2013ம் வருடம் சென்னையில் பலரையும் ஏமாற்றியதாக, மெட்ராஸ் கபே என்ற இந்திப் படத்தில் நடித்த மலையாள நடிகை லீனா மரியா பாலையும் அவரது காதலன் சுகேஷ் சந்திரசேகரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அந்த சுகேஷ் சந்திரசேகர்தான் தற்போது 1.30 கோடி ரூபாயுடன் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபலமானவர்களின் உறவினர் என கூறிக்கொண்டு மோசடியில் ஈடுபடுவது அவரது வழக்கமாக இருந்து வருகிறது. அவர் தமது 17வது வயதிலேயே பெங்களூரில் முதல் முறையாக கைது செய்யப்பட்டார். இவர் மீது அம்பத்தூர், கனரா வங்கியில் 19 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார், கர்நாடகாவில் அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக 65 லட்சம் மோசடி செய்தது உள்ளிட்ட பல புகார்கள் நிலுவையில் உள்ளன.
2013 ம் ஆண்டு ஜூலையில் சுகேஷ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர் 2015ம் ஆண்டு மும்பையில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டார். தற்போது டெல்லியில் 1.30 கோடி ரூபாயுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.