நாளை எம்.எல்.ஏ வசந்தகுமார் ராஜினாமா? - நாங்குநேரியில் யார் போட்டி?
கன்னியாக்குமரி எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள வசந்த குமார் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி எம்.எல்.ஏவான வசந்தகுமார் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கன்னியாக்குமரி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த சூழலில் திமுக தலைவர் ஸ்டாலினை அவர் நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை நாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார்.
இதனால் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தமிழக சட்டமன்றத்தை பொறுத்தவரை அதிமுகவிடம் 123 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். இதில் 3 பேர் அதிருப்தியில் இருக்கிறார்கள். மேலும் கருணாஸ், தனியரசு, அன்சாரி ஆகியோர் இல்லை என்றாலும் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாங்குநேரியில் அதிமுக வென்றால் அதன் பலம் 119 ஆக உயரும். திமுக அன்மையில் வெற்றி பெற்ற 13 சட்டமன்ற உறுப்பினர்களோடு சேர்த்து 101 எம்.எல்.ஏக்களை தங்கள் வசம் வைத்துள்ளனர். கூட்டணிக்கட்சிகளை சேர்த்தால் 109 எம்.எல்.ஏக்களை கையில் வைத்துள்ளது திமுக.
இந்நிலையில் திமுக ஆதரவுடன் மீண்டும் நாங்குநேரியை கைப்பற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால் திமுக நாங்குநேரியில் நிற்கும் என்ற தகவலும் பரவி வருகிறது.