சுதந்திரத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு ரத்தானது யாரால்? எதனால்? #Video

சுதந்திரத்திற்கு பிறகு பல தலைவர்கள் பூரண மது விலக்கை அமல்படுத்தி வந்த நிலையில், இன்று கள்ளச்சாராயமும், அரசு மதுபானமும் மூலைக்கு மூலை விற்கப்படுவது எதனால்? பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்துமா?

மது விலக்கு வேண்டும் என ஒரு தரப்பும், மது விலக்கு என்பது சாத்தியம் இல்லை என்று ஒரு தரப்பும் பேசி வரும் வேளையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் உருவானது எப்படி? பார்ப்போம் இங்கே....

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் சின்ன ராஜகுப்பத்தை சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணுபிரியா. கூலித்தொழிலாளியான தனது தந்தையின் குடிப்பழக்கத்தால் தன் குடும்பம் நிம்மதி இழந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்துக் கொண்டிருந்தார். இச்சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என மீண்டும் ஒருமித்த குரல்கள் ஒலிக்கத்தொடங்கி விட்டன.

சிறுமி தற்கொலை
சிறுமி தற்கொலை

ஆங்கிலேயர் ஆட்சியின் போது மதுவை விற்கவோ வாங்கவோ எந்த தடையும் இல்லை. மது அருந்துவது தனிமனித உரிமை. தரக்குறைவான மது அருந்துவது தான் உயிருக்கு ஆபத்து என்பது தான் ஆங்கிலேயரின் நிலைப்பாடு.

ஆனால் இதை எதிர்த்து காந்தியடிகள் தலைமையில் காங்கிரஸ்காரர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தினர்.

1937ம் ஆண்டு இந்தியாவில் பல்வேறு மாகாணங்களில் நடைப்பெற்ற தேர்தலில் சென்னை உள்ளிட்ட மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றிப்பெற்றது. மூன்று ஆண்டுகளுக்கு பூரண மதுவிலக்கை அமல்படுத்த சென்னை, மும்பை, பீகார் உள்ளிட்ட மாகாணாங்கள் முடிவு செய்தன. இதற்கு ராஜாஜியின் பங்கு மிக முக்கியமாகப் பார்க்கப்பட்டது. இது தான் ஆங்கிலேயர் ஆட்சியில் மது விலக்கின் நிலை.

TASMAC
TASMAC

1947 ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஓமந்தூர் ராமசாமி என்பவரின் முயற்சியால், 1948 ம் ஆண்டு சென்னையில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தது. அன்று தொடங்கி சுமார் 23 ஆண்டுகள் தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது.

1967ல் தமிழகத்தில் முதல்முதலாக தி.மு.க ஆட்சிக்கு வந்தது. முதலமைச்சர் பதவியில் அமர்ந்த அறிஞர் அண்ணாவிடம் மாநில அரசின் வருமானத்தைப்பெருக்க மதுவிலக்கை ரத்து செய்யலாம் என்ற யோசனையை சிலர் முன்வைக்க அது தேவையே இல்லை என்று அண்ணா கண்டிப்புடன் மறுத்தார். மதுவிலக்கில், ராஜாஜியும் குமாரசாமி ராஜாவும் அண்ணாவும் காட்டிய உறுதி, அதன் பிறகு வந்த ஆட்சியாளரிடம் இல்லை.

1970 ஜனவரி 30ம் நாள் காந்தியின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் போது நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த நிர்ணயித்தது மத்திய அரசு. ஆனால் செயல்படுத்த முடியவில்லை. அந்தச் சமயத்தில் குஜராத்திலும், தமிழகத்திலும் தான் மதுவிலக்கு அமலில் இருந்தது. அண்ணாவிற்கு பிறகு முதல்வரான கருணாநிதியால் 1971ல் மதுவிலக்கு சட்டம் ரத்து செய்யப்பட்டது.

karunanidhi
karunanidhi

இதைப்பற்றி கேள்விபட்ட ராஜாஜி, காயிதே மில்லத் போன்ற தலைவர்கள் கருணாநிதியின் வீடுதேடி வந்து அந்த திட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் கருணாநிதி ரத்து என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் ‘தமிழக அரசின் நிதிநிலமையை உத்தேசித்து மதுவிலக்கை ஒத்திவைக்கிறோம்’ என்றார். நடவடிக்கையை மேற்கொண்டார்.

இதன்பிறகு காங்கிரஸ் தரப்பில் மறியல் போராட்டம் நடந்தது. அதைத்தொடர்ந்து 1974-ல் மீண்டும் மதுவிலக்கு சட்டத்தை கொண்டு வந்தார் கருணாநிதி. அப்போது ‘மக்கள் கருத்தை மதித்து இது செய்யப்பட்டுள்ளது. காந்தி, அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்திய எனக்கு, மதுவிலக்கை ஒத்திவைத்தது உறுத்தலாக இருந்தது’ என்றார் அவர். ஆனால் இதன்பின் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்தது.

இதன்பின், 1977-ல் முதன்முதலாக அதிமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது எம்.ஜி.ஆர், மதுவிலக்கை மீண்டும் ரத்து செய்தார். பின் 1983-ல் டாஸ்மாக் தொடங்கப்பட்டது.

MGR
MGR

இதன் பின் நடந்தவை என்ன, என்ன அடிப்படையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அம்முடிவை எடுத்தார், இதன்பின் நடந்தவை என்ன என்பதை கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் முழுமையாக அறிந்துகொள்ளுங்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com