”கருப்பு நிறத்தை வைத்து கடவுளை சீண்டும் கூட்டம் உள்ளது..” - பவன் கல்யாண் ஆவேசம்!
மதுரையில் வண்டியூர் அருகே இந்து முன்னணி அமைப்பு சார்பில் முருக பக்தர்கள் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது, நிகழ்வில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் மற்றும் ஆதீனங்கள், சன்னியாசிகள் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான முருக பக்தர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். “குன்றம் காக்க, குமரனை காக்க..." என்ற முழக்கத்தை முன்வைத்து திருப்பரங்குன்றம் கோயில் முகப்பு தோற்றத்தில் மாநாட்டு மேடையும் வடிவமைக்கப்பட்டிருந்தது. கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக உரைகள், சிறப்புரைகளுடன் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டு திடலில் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள், 20க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டன. 3,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டதோடு போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டது.
இந்துக்களை சீண்டிப் பார்க்காதீர்கள்!
முருக பக்தர்கள் மாநாட்டில் பேசிய ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், ”மதுரையில் தந்தை சிவனும் தாய் பார்வதியும் மகன் முருகனும் உள்ளனர், மதுரை மண்ணில் வசிப்பதற்கு மக்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும், தென் தமிழகத்தில் மாபெரும் தலைவராக முத்துராமலிங்க தேவர் திகழ்ந்தார், இந்துக்களின் கலாச்சாரம் மிக ஆழமானது அதை யாராலும் அழிக்க முடியாது, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை முருகன் அறம் நிறைந்துள்ளது, உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகப்பெருமான், அநீதியை அழித்து, மக்களை சமமாக நடத்திய முருகன் புரட்சி தலைவராக திகழ்கிறார்.
இந்து மத நம்பிக்கையை கொண்டாட எனக்கு உரிமை உள்ளது அதை கேட்க நீங்கள் யார்?. இந்து மதத்திற்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் அவமரியாதை செய்யாதீர்கள். இந்து மதத்தை கேள்வி கேட்பவர்கள் அரேபியாவில் இருந்து வந்த மதம் குறித்து கேள்வி கேட்க முடியுமா?, இந்துக்களை சீண்டி பார்க்காதீர்கள் சாது மிரண்டால் காடு கொள்ளாது.
கடவுள்களின் நிறங்களை வைத்து அரசியல் செய்கிறார்கள், கருப்பு நிறத்தை வைத்து கடவுளை சீண்டும் கூட்டம் இங்குள்ளது, தமிழகத்தில் முருகனை சீண்டி பார்க்கக்கூடிய கூட்டம் உள்ளது, கந்த சஷ்டி கவசத்தை கிண்டல் செய்கிறார்கள், இந்து கடவுளை கலாச்சாரத்தை கேலி செய்வதற்கு ஜனநாயகத்தில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் இந்து மதத்தை பற்றி பேசுபவர்கள் மற்ற மதத்தை பற்றி பேச முடியுமா?.
இந்துக்கள் கோழைகள் அல்ல, முருக பக்தர்கள் ஒரு பார்வை பார்த்தாலே போதும், முருகனை இழிவாக பேசினால் இந்துக்களின் இதயம் நொறுங்க வேண்டாமா?, முருகன் எனது கடவுள் அவர் எனக்கு தொடர்ந்து தைரியங்களை வழங்கி வருகிறார், நம்முடைய எண்ணங்கள் நிறைவேற வேண்டுமென்றால் இந்துக்கள் ஒன்றாக இணைந்து போராட வேண்டும், தமிழகத்தில் தர்மத்தின் பாதையில் மாற்றம் ஏற்படும், முருகனை நம்பினால் வெற்றி, உயர்வு, எழுச்சி கிடைக்கும்" என பேசினார்.