பசும் பாலா? பாக்கெட் பாலா? எது சிறந்தது? என்ன சொல்கிறார்கள் நிபுணர்களும், மருத்துவர்களும்?
பாக்கெட் பாலில் பெரும்பாலானவை போலியானவை… கண் முன்னே கறந்து விற்கப்படும் மாட்டுப்பால் மட்டுமே உடலுக்கு நன்மை பயக்கும் என்று சமூக ஊடகங்களில் அவ்வப்போது யாராவது எழுதுவதும், அதை உண்மையென்று எண்ணி மற்றவர்கள் பரப்புவதும் தொடர்கதையாக இருக்கிறது. இந்தத் தகவல் எந்த அளவுக்கு உண்மை… பார்க்கலாம்.
இந்தியாவில் தற்போது நுகரப்படும் பால் அளவு உற்பத்தியைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதாகவும், கலப்படப் பால் அதிகரித்துவிட்டதே அதற்குக் காரணம் என்றும் திரும்பத் திரும்ப சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவுகின்றன. அந்த வரிசையில்... சென்னையில், கறந்த மாட்டுப்பால் 70 ரூபாய்க்கு மேல் இருப்பதாகவும், பிறகெப்படி ஒரு லிட்டர் பாக்கெட் பால் 50 ரூபாய்க்குள் கிடைக்கிறது.. கலப்படம்தான் காரணமா என்று ஒருவர் எழுப்பிய சந்தேகம் மீண்டும் வைரலாகி இருக்கிறது.
இதுகுறித்து பால்வளத்துறை நிபுணர்களிடம் விசாரித்தால், இந்தியாவில் 1951ஆம் ஆண்டில் 19 கோடியாக இருந்த கால்நடைகளின் எண்ணிக்கை இப்போது இரு மடங்காக, அதாவது கிட்டத்தட்ட 38 கோடியாக அதிகரித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். கலப்பின மாடுகள் அதிகரிப்பு காரணமாக 1951இல் 170 லட்சம் டன்னாக இருந்த பால் உற்பத்தி தற்போது 2400 லட்சம் டன்னாக அதிகரித்துவிட்டது என்றும், எனவே, ஆங்காங்கே கலப்பட பால் இருக்கலாமே ஒழிய, பாக்கெட் பால் எல்லாமே கலப்படம் என்று கூற முடியாது என்றும் பால்வளத்துறை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுசாமியிடம் கேட்டபோது, “இந்தியா பால் உற்பத்தியில் உலகிலேயே முதலிடத்தை வகிப்பதாகவும், ஆவின் உள்ளிட்ட நிறுவனங்கள் தரப்பரிசோதனை செய்தே பாலை கொள்முதல் செய்வதால் அந்தப் பால் 99.9 சதவீதம் கலப்படமற்றது” என்றும் தெரிவித்தார்.
ஊட்டச்சத்து நிபுணர் லேகாவும், “சுத்தம் மற்றும் உடலுக்குத் தேவையான சத்து அடிப்படையில் பார்த்தால் கறந்த பாலைவிட பாக்கெட் பாலே சிறந்தது” என்று தெரிவித்தார். ஆகவே, பீதியூட்டும் சமூக வலைதள பதிவுகளைப் புறந்தள்ளிவிட்டு ஆவின், அமுல் போன்ற கூட்டுறவு பால் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளை தாராளமாக வாங்கிப் பயன்படுத்தலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

