’’ஊரெல்லாம் மழை.. ஆனா எங்க ஏரி மட்டும் வறண்டு கிடக்கு’’ - கலங்கும் விவசாயிகள்!

’’ஊரெல்லாம் மழை.. ஆனா எங்க ஏரி மட்டும் வறண்டு கிடக்கு’’ - கலங்கும் விவசாயிகள்!
’’ஊரெல்லாம் மழை.. ஆனா எங்க ஏரி மட்டும் வறண்டு கிடக்கு’’ - கலங்கும் விவசாயிகள்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  தூர்ந்துபோன நீர்வரத்து கால்வாய்களால் வறண்டு காணப்படும் உத்திரமேரூர் ஏரியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஏரிகளில் ஒன்று உத்திரமேரூர் ஏரி. இந்த ஏரியில் நீர் நிரம்பினால் வேடப்பாளையம், காக்கநல்லூர், முருக்கேரி, நீரடி, புலியூர், குப்பை நல்லூர், காவனூர் புதுச்சேரி, காட்டுப்பாக்கம், பட்டஞ்சேரி, ஓங்கூர் உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த 5,636 ஏக்கர் விவசாய நிலங்கள் மூன்று போகமும் பயன்பெறும்.


இந்நிலையில் இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிவர் புயலால் கனமழை பெய்தும் கூட 20அடி ஆழம் கொண்ட இந்த ஏரிக்கு 7 அடி தண்ணீர் மட்டுமே தற்போது வந்துள்ளது. கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 157 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 150 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமான நீர் வந்துள்ளது. முக்கிய பெரிய ஏரிகளான தென்னேரி, மணிமங்கலம் ஏரி ஆகியவை நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது.


ஆனால் உத்திரமேரூர் ஏரிக்கு 7 அடி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. ஏரியின் பெரும்பாலான பகுதிகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் இந்த ஏரியைச் சுற்றியுள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். செய்யாற்றில் வெள்ளம் வந்தால் மட்டுமே இந்த ஏரிக்கு நீர் வரும். அனுமந்தண்டலம் ஏரியில் இருந்து ஒரு கால்வாயை தவிர, மற்ற நீர்வரத்துக் கால்வாய்கள் அனைத்தும் காய்ந்தும், தூர்ந்த நிலையிலும் உள்ளன. தற்போது செய்யாற்றில் வெள்ளம் ஓடும் நிலையில் நீர்வரத்து கால்வாய்கள் முறையாக இல்லாததால் வறண்டு காணப்படுகிறது. கால்வாய்களை தூர்வாரி முறைப்படுத்தினால் உத்திரமேரூர் ஏரி விவசாயிகளுக்கு பெருமளவில் உதவியாக இருக்குமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com