சென்னை தவிர பிற மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் ஊரடங்கு?
சென்னை தவிர பிற மாவட்டங்களில் எங்கெங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் மீண்டும் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்றிலிருந்து ஜூன் 30 ஆம் தேதிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, மறைமலைநகர் நகராட்சிகள், நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிகள், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

