சுற்றுலாப் பயணிகளுக்காக காத்திருக்கும் கொடைக்கானல் மக்கள்

சுற்றுலாப் பயணிகளுக்காக காத்திருக்கும் கொடைக்கானல் மக்கள்
சுற்றுலாப் பயணிகளுக்காக காத்திருக்கும் கொடைக்கானல் மக்கள்

எப்போது வருவார்கள் சுற்றுலாப் பயணிகள் ? வாழ்வாதாரத்துக்காக காத்திருக்கும் கொடைக்கானல் மக்கள் !

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்குடன் 144 தடைஉத்தரவு போட்டுள்ளதால் கொடைக்கானல் நகருக்குள் சுற்றுலா பயணிகள் வர தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
 

கோடைக் காலமான ஏப்ரல் மே ஜுன் மாதங்களில்  குளுமையை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகளின் கூட்ட நெறிசலில் சிக்கித் தவிக்கும் கொடைக்கானல், கொரோனா ஊரடங்கால் வாகன போக்குவரத்து மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாததால் மாசில்லா மலைப்பகுதியாக மாறியுள்ளது. ஆனால் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மட்டுமே நம்பி தொழில் செய்யும் மக்களின் வாழ்வாதாரம்தான் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.
 
சுற்றுலாப் பயணிகளை நம்பி தொழில் செய்யும் மக்களின் வாழ்வாதாரம் குறித்து கொடைக்கானல் ஹோட்டல் அசோஷியேசன் செயலாளர் அப்துல் கனிராஜா கூறும்போது "
கொடைக்கானலில் ஏப்ரல் மே ஜுன் மாதங்கள்தான் சீசன். முழுக்க முழுக்க சீசனையும் சுற்றுலா பயணிகளையும் நம்பி பொழப்பு நடத்தும் மக்கள் இந்த மூன்று மாதத்தில் சம்பாதிக்கும் பணத்தை வைத்துதான் அடுத்த சீசன்வரை வாழ்க்கையை நடத்துவார்கள். அதேபோல வாங்கிய கடனையும் அடைப்பார்கள்"

மேலும் அவர் " கொரோனாவின் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போட்டு வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளின் வருகை முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில்செய்யும் எம்மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் தொழில் செய்யலாம் என்றால் அதற்கான தொழிற்சாலை வசதிகள் எதுவும் இங்கே இல்லை. கொரோனாவால் நுற்றுக்கு நூறு பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது கொடைக்கானல். இந்த இக்கட்டான சூழலில் தமிழகஅரசு கட்டடவரி தொழில்வரி ஜி.எஸ்.டி வரி மின்கட்டணம் போன்றவைகளை தள்ளுபடி செய்யவேண்டும். அதேபோல எங்கள் மீது அக்கறையுள்ள அரசு நாங்கள் கட்டியுள்ள ஜி.எஸ்.டி வரியை திருப்பி தரவேண்டும்"

இறுதியாக " கொரோனாவால் சீசன் காலம் முழுவதும் பாதிப்படைந்துள்ளது. அதனால் இடைகால சீசனாக ஒரு சீசனை உருவாக்கி சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வருவதற்கு வழிவகை செய்யவேண்டும். கொடைக்கானலில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளையும் அரசு செய்யவேண்டும்" என்கிறார் அப்துல் கனிராஜா.

 சீசன் காலங்களில் கொடைக்கானல் நகர் முழுவதும் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். அவர்களின் வருகையால் வருமானமும் அதிகமாக இருக்கும. என பேச ஆரம்பித்தார் கொடைக்கானல் வாடகைகார் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்க செயலாளர் கணேசன் " கொடைக்கானலை மேல்மலை கீழ்மலை நகரம் என மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். இதில் மேல்மலை கீழ்மலை பகுதிகள் விவசாய பூமி. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு குறைவுதான். ஆனால் நகரம் மட்டும்தான் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில்செய்யும் இடம். சுற்றுலா பயணிகள் வந்தால்தான் நாங்கள் பொழப்பை ஓட்ட முடியும் அவர்கள் வரவில்லை என்றால் எங்கள் பாடு திண்டாட்டம்தான்" என்கிறார்.

மேலும் அவர் " முற்றிலும் வருமானம் இல்லாததால் ரேஷன் அரிசியை வைத்துதான் வயிற்றை கழுவுகிறோம். அரிசி கிடைத்துவிட்டது ஆனால் காய்கறி மளிகைப் பொருள்கள், கேஸ் வாங்க காசு இல்லை. சுற்றுலா பயணிகளை நம்பி நானூறு டாக்ஸி ஓட்டுனர் குடும்பம் இருக்கிறது. அதேபோல சாலையோர வியாபாரிகள் குதிரை ஓட்டுபவர் படகு செலுத்துபவர் என யாருக்குமே வருமானம் இல்லை.  சீசனில் வரும் வருமானத்தை வைத்து வண்டிவாங்கிய கடனை அடைத்ததுபோக குழந்தைகளின் படிப்புச் செலவு மற்றும் குடும்பச் செலவுகளை பார்த்துக் கொள்வோம். ஆனால் கொரோனாவால் வருமானம் இல்லாமல் ரொம்ப கஷ்டப்படுகிறோம்"

கவலையுடன் பேசிய அவர் " அரசாங்கம் ஆயிரம் ரூபாயுடன் அரிசி பருப்பு கொடுத்தார்கள். அந்த ஆயிரம் ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும். வருமானம் இன்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ள கொடைக்கானல் மக்களுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்யவேண்டும்" என்றார்.

சுற்றுலா வழிகாட்டி சங்க தலைவர் ராபின் ஆரோக்கிய தாஸ் கூறும்போது " கொடைக்கானல் மக்களுக்கு போன வருசத்தில் இருந்தே பிரச்சனைதான். ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கபட்டதால் வருமானத்தை இழந்தோம். இப்போது ஊரங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் வருமானம் இன்றி மிகவும் சிரமத்தில் உள்ளோம். மாற்றுத் தொழில்செய்ய கொடைக்கானலில் எந்த வசதியும் கிடையாது. வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா தளங்களை சுற்றிக் காண்பித்து அவர்களுக்கு ரூம் போட்டுக்கொடுப்பதன்  மூலமாக கிடைக்கும் கமிஷனை வைத்துதான் எங்கள் குடும்பத்தை நடத்துவோம்.  கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பி நன்காயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பம் இருக்கிறது. அதில் 250 குடும்பம் சுற்றுலா வழிகாட்டி சங்க குடும்பம். எங்களது சங்கம் நலவாரியத்தில் பதிவு செய்யப்படவில்லை. நலவாரியத்தில் பதிவு செய்துள்ளோருக்குகூட இதுவரை அரசின் உதவிகள் வந்துசேரவில்லை" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com