“நீதி வெல்வது எப்போது..?” - அற்புதம்மாள் கேள்வி..!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், நீதி வெல்வது எப்போது என அவரின் தாய் அற்புதம்மாள் வினவியுள்ளார்.
இது தொடர்பாக அற்புதம்மாள் தனது ட்விட்டர் பக்கத்தில், மகன் பேரறிவாளன் பரோலில் வந்தபோது மகிழ்ச்சியாக இருந்ததைக் குறிப்பிடும் வகையில், விடுப்பில் வந்தான் மகிழ்ந்தோம் எனத் தெரிவித்துள்ளார். விடைபெற்று சென்றான் 'உடைந்தோம்' என்று தெரிவித்துள்ள அற்புதம்மாள், வழியும் கண்ணீர் விழிகளோடு அவன் விடுதலைக்கு காத்திருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை, விடுவிப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் நிறைடைந்தும், தமிழக ஆளுநர் அந்தத் தீர்மானம் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், நீதி வெல்வது எப்போது என அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.