அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை..!
காஞ்சிபுரத்தில் பெய்த கனமழையின் காரணமாக, அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையில் தவித்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்வதால், நீர் நிலைகளுக்குத் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நெல் பயிரிட்ட விவசாயிகள் இந்த மழையின் காரணமாக பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறார்கள்.கிணற்று நீர் பாசன முறையில் பயிரிடப்பட்ட நெல் தற்போது கதிர் முற்றிய நிலையில் அறுவடைக்குத் தயாராக உள்ளது. இந்தச் சூழலில் மழை பெய்ததால் கதிர்கள் தலை சாய்ந்து தண்ணீரில் மூழ்கிக் கிடக்கின்றன. இது விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் அறுவடைக்குத் தயாராக உள்ள சுமார் 50 ஏக்கர் நெற்பயிற்கள் மழை பெய்ததால் தண்ணீரில் மூழ்கிவிட்டன. தண்ணீரை வடிக்க முடியாதபடி வாய்க்கால்களிலும் நீர் தேங்கி நிற்கிறது. இதனால் முற்றிய பயிர்களை இயந்திரம் மூலம் அறுவடைசெய்ய முடியாத நிலையையும் உருவாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.