ஏழை, எளிய மக்கள் பசியால் வாடிவிடக் கூடாது என்பதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திட்டம்தான் ‘அம்மா உணவகம்’. காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மிகக் குறைந்த விலையில் இங்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் முதலில் தொடங்கப்பட்ட இத்திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விரிவுபடுத்தப்பட்டது.
ஒரு வேளை மட்டும் உணவு உண்டு வாழ்பவர்கள்.. அரைசாண் வயிற்றை கூட முழுதாக நிரப்ப முடியாமல் கஷ்டப்படுபவர்கள் போன்ற மக்களை நினைத்து ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது தான் இத்திட்டம். ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இந்தத் திட்டத்தில் லாப, நஷ்டம் பார்க்க ஆரம்பித்தது தமிழக அரசு. கடந்த மார்ச் மாதம் 2018-19-ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு அம்சங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு பின் செய்தியாளர்களை நிதித்துறை செயலாளர் சந்தித்தார். அப்போது பல இடங்களில் அம்மா உணவகம் மூடப்படுகிறதே என்ன காரணம் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நிதித்துறை செயலர், அம்மா உணவகத்துக்கு அரிசி இலவசம். மற்ற பொருட்கள் பொது விநியோக திட்ட விலையில் கொடுக்கப்படுகிறது. திட்டத்தின் தொடக்கத்தில் நஷ்டம் ஏற்படாது என்று சொன்னார்கள். இப்போது நஷ்டம் வந்துவிட்டது என்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளே நிர்வகிக்கிறார்கள். நஷ்டம் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். நஷ்டம் ஏற்பட்டதால் சில உணவகங்கள் மூடப்பட்டது என்றார்.
அம்மா உணவகத்தின் முக்கியத்துவத்தை அறிந்த மற்ற மாநில அரசுகள், அதிகாரிகளை அனுப்பி தங்களது மாநிலத்திலும் இதுபோன்று கொண்டு வரலாமா என யோசித்த திட்டத்தில் அரசு லாப நஷ்டம் பார்த்து மூடுவது வருத்தமான விஷயம்.
அம்மா உணவகம் உண்மையில் எப்படி இருக்கிறது? அறிந்து கொள்ள சென்னை சைதாப்பேட்டை சென்றோம். அங்குள்ள மாந்தோப்பு அருகிலேயே அம்மா உணவகம் செயல்பட்டு வந்தது. நாம் சென்ற நேரம் 12.30 மணி. அம்மா உணவத்திற்குள் வரிசை, வரிசையாக மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர். பள்ளியிலேயே மதிய உணவு வழங்கப்படுகிறதே..? மாணவர்கள் ஏன் அம்மா உணவகத்தை நோக்கி படையெடுகிக்கிறார்கள் என உள்ளே சென்றோம். அங்கு தரையில் கூட்டம், கூட்டமாக உட்கார்ந்து மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நின்று கொண்டு சாப்பிட வசதி உண்டு. ஆனால் மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் அமர்ந்து ஜாலியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் பேச்சு கொடுத்தோம்.
பள்ளியில்தான் மதிய உணவு வழங்கப்படுகிறதே.. இங்கு காசு கொடுத்து சாப்பிட காரணம் என்ன என்றோம்.
மாணவர்கள் பேச ஆரம்பித்தனர். “மாந்தோப்பிலுள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்தான் படிக்கிறோம். பள்ளியில் சாப்பாடு நல்லாவே இல்ல. ஒருநாள் உப்பு போடாம கொடுக்கிறாங்க. ஒருநாள் உப்பு அள்ளி போட்றாங்க. அதுகூட பரவாயில்ல; அடிக்கடி சாப்பாட்டில் பூச்சி இருக்கு. முட்டைக்குள்ள இருந்து புழு வருது” என்றார்கள்.
‘என்னது முட்டைக்குள்ள எப்படி புழு வருதா?’ என கேட்டதற்கு..
“எப்படின்னே தெரியல. வீட்டில் தருகிற முட்டை நல்லாயிருக்கு. ஆனால் பள்ளிக்கூடத்து முட்டை நல்லாவேயில்ல” என்றனர். ஏற்கனவே சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டையில் தமிழக அரசின் ஊழல் என்று செய்தியாகி இருந்தது. அதன் இன்னொரு வடிவம்தான் இது. தொடர்ந்து பேச ஆரம்பித்த மாணவர்கள், “ பள்ளியில் நிறைய பசங்க சாப்பிடுறோம். அதுனால சுத்தம் இல்ல. சுகாதாரம் இல்ல. நிறைய பசங்க சாப்பிடுவதால் சில நேரம் சாப்பாடு இல்லாமல் போகிறது” என்றனர்.
சரி அம்மா உணவகம் சாப்பாடு எப்படி இருக்கிறது என்றோம். “நல்லா இருக்கு அண்ணா. ஆனால் எங்களுக்காக இன்னும் கொஞ்சம் விலைய குறைக்கலாம். நிம்மதியாகத் தான் சாப்பிடுகிறோம். தினசரி வருவதால் கத்தக்கூடாதுனு கண்டிசன் போடுறாங்க” என்றனர்.
உணவகத்தின் மேற்பார்வையாளரிடம் பேசினோம். “பார்சல் கொடுக்ககூடாதுதான். ஆனாலும் காலையில் நிறைய பள்ளி பிள்ளைகள் காலையில் சாப்பிட்டு விட்டு மதிய உணவை தங்களது டிபன் பாக்சில் வாங்கிச் செல்கிறார்கள். ஏராளமான இளைஞர்களும் இங்கு வந்து சாப்பிடுகிறாகள். வயதானவர்கள் நிறையபேர் சாப்பிடுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
உணவு தயாரிக்கும் பெண்களிடம் பேசினோம். “காலையில் 4 மணிக்கு வேலைக்கு வந்துடுவோம் சார். மதியம் 1 மணி வரை வேலை.. 1 மணிக்கு வர்றவங்களுக்கு 9 மணி வரை வேலை.. சம்பளம் கொஞ்சம் முன்ன பின்ன வரும். ஆனாலும் 10ஆம் தேதிக்குள்ள வந்துரும். நாங்க மகளிர் சுய உதவி குழுவில் இருந்தோம். அதன்மூலம் இந்த வேலை கிடைத்தது. ஏராளமானோர் வந்து சாப்பிடுவதால் மிகுந்த சுத்தத்துடனும், கவனத்துடனும் இந்த வேலையை செய்கிறோம். உண்மையில் இது எங்களுக்கு மன நிம்மதியை தருகிறது. நாலு பேருக்கு எங்க கையால சமைச்சு போடுறது எங்களுக்கு கிடைச்ச வரம் சார். வீட்ல வேலை இல்லாமத்தான் இருந்தோம். ஆனால் இப்போது வேலையும் இருக்கு.. நிம்மதியும் இருக்கு. மொத்தமாக 18 பேர் வேலை செய்றோம்”என்றனர்.
அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த வயதான ஒரு அம்மாவிடம் பேசினோம். “வீட்டுல ஒழுங்கா சாப்பாடு இல்ல. அதனால இங்க வந்து சாப்பிடுகிறேன். நல்லா இருக்குப்பா” என சொல்லி முடித்துக் கொண்டார்.
குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் சத்தான உணவு என்பது அவசியமான ஒன்று. அதற்காக ஏழை மாணவர்களும் பள்ளி செல்ல கொண்டுவரப்பட்டது மதிய உணவு திட்டம். ஆனால் அங்கு பூச்சிகளோடு சாப்பாடு கொடுத்தால் நம் மாணவர்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கும்..? திடமான உடலோடு மாணவர்கள் எப்படி விளையாட்டுத் துறையில் சாதிக்க முடியும்..? நாம் பார்த்தது ஒரு பள்ளியைத் தான். மற்ற பள்ளிகளில் சாப்பாடு எப்படி வழங்கப்படுகிறது என்பது கேள்விக்குறி.. அதேசமயம் ‘அம்மா உணவகம்’ மூலம் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர். இப்படிப்பட்ட ஒரு திட்டத்தை லாப நஷ்டம் பார்த்து அரசு மூடத்தான் வேண்டுமா என்பது அடுத்த கேள்வி.. அரசு இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளுமா..? பொறுத்திருந்து பார்ப்போம்.
அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவுகள்:
காலை உணவு நேரம் (7 மணி முதல் 10 மணி வரை)
இட்லி 1- ரூபாய் 1
பொங்கல்- ரூபாய் 5
மதிய உணவு நேரம்( 12 மணி முதல் 3 மணி வரை)
சாம்பார் சாதம்- ரூபாய் 5
எலுமிச்சை சாதம்- ரூபாய் 5
கருவேப்பிலை சாதம்- ரூபாய்5
தயிர் சாதம்- ரூபாய் 3
இரவு உணவு (இரவு 9 மணி வரை)
2 சப்பாத்தி- 3 ரூபாய்