“நாங்கள் முன்வைத்த பிரச்னையே வேறு” - தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வைத்த காரசார வாதங்கள்

“நாங்கள் முன்வைத்த பிரச்னையே வேறு” - தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வைத்த காரசார வாதங்கள்
“நாங்கள் முன்வைத்த பிரச்னையே வேறு” - தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வைத்த காரசார வாதங்கள்

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட தங்கத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தது. 

இதையடுத்து வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்து வந்தார். விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணியளவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு இன்னும் சில நிமிடங்களில் வரவுள்ள நிலையில், வழக்கு விசாரணையின் போது முதலமைச்சர், சபாநாயகர், தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதங்களை இனி பார்க்கலாம்..

முதல்வர் பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதம்.....

முதல்வருக்கு சட்டபேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா என ஆளுநர் கருதக்கூடிய நிலையை 18 எம்.எல்.ஏ-க்கள் ஏற்படுத்தியுள்ளனர். இதன்மூலம், அவர்கள் கட்சியின் உறுப்பினர் பதவியை தானாக விட்டுக் கொடுத்து விட்டதாகவே கருதமுடியும். அதனால் தான், 18 பேரையும்  தகுதி நீக்கம் செய்து சபாநாயகர்  உத்தரவு பிறப்பித்தார். முதல்வரை மாற்றுவது குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது. 

டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் ஆளுநருக்கு  கடிதம் அளித்தது; ஆளுநரை எதிர்கட்சி தலைவர் சந்தித்தது போன்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளே தகுதி நீக்கத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. 18 எம்.எல்.ஏ.-க்கள் அளித்த கடிதத்தின் அடிப்படையில், தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வித பாரபட்சமும் காட்டியதாக தெரியவில்லை.

அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி வாதம்....

ஜக்கையனை ஒரு மாதிரியாகவும், தகுதிநிக்கம் செய்யப்பட்டவர்களை வேறு மாதிரியாகவும் நடத்தியதாக கூறுவது தவறு. சபாநாயகர் அழைத்தபோது, ஜக்கையன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்ததுடன், முதல்வரை மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் மாற்றியதால்தான் அவர் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது. மற்றவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றவில்லை என்பதை அறிந்துதான் கட்சித்தாவல் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன். 

என்னை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த தடை இருந்ததே தவிர அதிமுக-வின் சட்டமன்ற உறுப்பினர்களாகத்தான் நீடித்தனர். கட்சியில் இருந்துகொண்டே முதல்வருக்கு எதிராக செயல்படுவதால் கட்சி தாவலில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தேன். வானளாவிய அதிகாரம் படைத்த சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட நீதிமன்றத்துககு அதிகாரம் இல்லை

தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் தரப்பு வாதங்கள்.....

சபாநாயகர் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது மட்டுமல்லாமல், உள்நோக்கம் கொண்டது. ஜக்கையனுக்கு ஒரு முடிவு, எங்களுக்கு ஒரு முடிவு என எடுத்துள்ளார். சபாநாயகர் உத்தரவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும். 

முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்பது தொடர்பாக உள்கட்சியை அணுகவில்லை என முதல்வர் தரப்பில் சபாநாயகரிடம் கூறப்பட்டது. இதன் நகலை எங்களுக்கு வழங்கியிருந்தால் பதில் அளித்திருப்போம். திமுக-வுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டோம் என்பதற்கும் எவ்வித ஆதாரங்களும் இல்லை. பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீது நாங்கள் மார்ச்சில் கொடுத்த புகாரில் நடவடிக்கை இல்லை. ஆனால் எங்கள் மீது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொறடா அளித்த புகாரில் அவசர கதியில் உத்தரவிட்டிருப்பதே உள்நோக்கத்தை நிரூபிக்கிறது. 

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் அரசுக்கு எதிராக வாக்களித்து விடுவோம் என  தகுதி நீக்கம் செய்துள்ளனர். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டோம் என நீதிமன்றத்திலேயே பலமுறை தெரிவித்தோம். ஆளுரிடம் கடிதம் கொடுத்தபோது அதிமுக ஒன்றே இல்லை. தனித்தனி அணியாகத்தான் இருந்தார்கள். அப்படிப்பட்ட நிலையில் கட்சித்தாவலில் நடவடிக்கை தவறு. பன்னீர் செல்வத்திற்கு எதிராக நாங்கள் அளித்த புகாரில் நோட்டீஸ் அனுப்பி இருந்தால் கூட ஆளுநரை சந்திப்பதை நாங்கள் தவிர்த்திருப்போம். 

முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்பது எங்களுக்கு இரண்டாவது பட்சம்தான், ஆனால் அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் எங்களது முதல் குற்றச்சாட்டு. நாங்கள் ஆளுநரை சந்தித்த அதே நாளிலேயே திமுகவும் சந்தித்ததற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. எங்கள் மீதான புகாரில் முதல்வரிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற எங்கள் தரப்பு வாதத்தையும் சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார். 

கட்சிக்குள் பிரச்னையை எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று கூறுவது சரிதான், ஆனால் நாங்கள் முதல்வரிடம் மற்றும் சபாநாயகரிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்ற பொழுது அவர்கள் செவிசாய்க்க  மறுத்துவிட்டார்கள்

பேரவை தலைவர் தனபால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் வாதம்...

முதல்வருக்கு எதிரான புகாரை தனிப்பட்ட நபருக்கு எதிரான புகாராக கருதமுடியாது. அரசுக்கு எதிரானதாகத்தான் கருத முடியும். கட்சிக்கு வெளியிலிருந்து முதல்வர் மீது தாக்குதல் நடத்தும்போது, அது கட்சியைவிட்டு வெளியேறியதாக மட்டுமே பார்க்க முடியும்.  அரசை கலைப்பதற்கான அதிகாரம் மட்டுமே ஆளுநருக்கு உள்ளது. அதனடிப்படையில் அவரின் அரசியல்சாசன கடமைகளை ஆற்றுங்கள் என மனு அளிப்பது, ஆட்சியை கலைப்பதற்காக மட்டும் தான். தங்களுடைய ஆதரவை திரும்ப பெற்று கொள்வதாக ஆளுநரிடம் மனு அளித்ததை, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களிப்பதற்காகவே என்று கருதியது சரியே. 

சபாநாயகர் முடிவின் மீது எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது. சபாநாயகர் முடிவில் உள்நோக்கம் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். கட்சியிலிருந்து ராஜினாமா செய்வது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட உறுப்பினரின் நடத்தை, செயல்பாடு, பேச்சு கூட  கட்சியில் இருந்து தானாக வெளியேறியதாக கருத முடியும். தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீஸுக்கு பதிலளிக்க 7 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்க விதிகள் வகை செய்யும் போது, 21 நாட்கள் அவகாசம் வழங்கியதிலிருந்து, இயற்கை நீதி மீறப்படவில்லை என்பது தெளிவாகிறது. நீதிபதிகளுக்கு சமமான அதிகாரம் பெற்ற சபாநாயகரின் முடிவு விபரீதமானது என விமர்சித்த நீதிபதியின் கருத்தை ஏற்க முடியாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com