ஆவினுக்கு என்னாச்சு? ரூ.143 கோடி இழப்பு.. அதிகரிக்கும் நெருக்கடி!
தமிழகத்தில் சில தினங்களாக ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் என்ன, அதனால் யாருக்கு என்ன விதமான பாதிப்பு, ஆவின் நிறுவனத்துக்கான இழப்பு என்ன உள்ளிட்டவற்றை அலசுகிறது இந்தத் தொகுப்பு.
தமிழகத்தில் பால் உற்பத்தியைப் பெருக்கவும், கூட்டுறவு முறையில் பாலைக் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்திலும் 1981இல் உருவாக்கப்பட்டதுதான் ஆவின் நிறுவனம். இந்தியாவில் அமுல், நந்தினி வரிசையில் முக்கிய பால் கூட்டுறவு நிறுவனமான ஆவின், தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பாலைக் கொள்முதல் செய்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்துவருகிறது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த பால் உற்பத்தி சுமார் 3 கோடி லிட்டராக இருக்கும் நிலையில், அதில் வெறும் 10.3 சதவீத அளவு பாலையே ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. நாள் ஒன்றுக்கு ஆவினுக்கு 37 லட்சம் லிட்டர் பால் தேவைப்படும் நிலையில், 27 லட்சம் லிட்டர் பாலை மட்டும் ஆவின் கொள்முதல் செய்கிறது. கொள்முதல் குறைவு காரணமாக இயல்பாகவே ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.
இந்தச் சூழலில், நிதி இழப்பைக் காரணம் காட்டி, பால் விநியோகத்தை மேலும் 10 சதவீதம் குறைக்க வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவே தற்போதைய பால் தட்டுப்பாடுக்குக் காரணம். உதாரணமாக, சென்னையில் நாள்தோறும் 16.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில், கடந்த 6 மாதங்களில் அதில் 25 சதவீத விநியோகம் குறைந்துள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அதிலும் 10 சதவீதம் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆரோக்கியா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஆவினைவிட அதிக கொள்முதல் விலை வழங்குவதும், ஆவினுக்கான பால் வரத்து குறைவதற்கு முக்கியக் காரணம். இந்தச் சூழலில், பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு ஆவின் கொள்முதல் விலையை உயர்த்தியது.
லிட்டருக்கு 38 ரூபாயாக இருந்த கொள்முதல் விலை, தற்போது 44 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் கொள்முதல் விலை குறைவுதான் என்பதால், இது போதிய பலன் அளிக்கவில்லை. கொள்முதல் விலை உயர்த்தப்பட்டாலும், அதற்கேற்ப விற்பனை விலை மாற்றப்படாதது, உற்பத்திச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஆவின் நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. 2025-26ஆம் நிதியாண்டில் மட்டும் ஆவின் நிறுவனத்துக்கு 143 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

