தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, இன்று சென்னை பனையூரில் உள்ள, கட்சித் தலைமை அலுவலகத்தில், வெளியிட்டார் கட்சியின் தலைவர் விஜய். சிகப்பு மற்றும் மஞ்சள் நிறக் கொடியில் , இரண்டு போர் யானைகள் மற்றும் வாகை மலர், அதனைச் சுற்றி 28 நட்சத்திரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. தவிர, கொடிப் பாடலும் இன்று வெளியிடப்பட்டது. அதில், அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதற்கான பின்னணி என்ன, விஜய்யின் திட்டம் என்ன?. விரிவாகப் பார்ப்போம்
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து, இன்று கட்சியின் கொடியை விஜய் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், கொடிப் பாடலும் வெளியிடப்பட்டது.
அதில், யானைகள் மீது அமர்ந்தபடி சிலர் மக்களை துன்புறுத்துகின்றனர். கையில் காப்புடன் குதிரையில் வரும் விஜய், தனது இரு யானைகளின் மூலம் அவர்களை வெற்றி பெறுகிறார். தொடர்ந்து, “தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பிறக்குது.. மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது” என்ற வரிகளுடன் பாடல் தொடங்குகிறது. அப்போது, விஜய்யுடன், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் விஷுவலும் வருகிறது. அதற்கான பிரத்யேகக் காரணங்கள் என்ன, கட்சி வட்டாரத்தில் பேசினோம்.
“அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரை அரசியல் வழிகாட்டிகளாக நினைக்கிறார் தளபதி விஜய். தவிர, கட்சிக் கட்டமைப்பில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவை அடித்துக்கொள்ளவே முடியாது. அதிலும், திமுகவைப் பொறுத்தவரை கொள்கை ரீதியாகவும் கட்சி கட்டமைக்கப் பட்டிருப்பதால்தான் இன்றளவும் அந்தக் கட்சி வலிமையாக நிற்கிறது.
தேர்தல் அரசியல் என்று பார்த்தால், பல்வேறு தோல்விகளைச் சந்தித்திருக்கிறது திமுக. அப்போதெல்லாம் கொள்கை ரீதியான கட்சிக் கட்டமைப்புதான் காப்பாற்றியிருக்கிறது. அப்படி திமுகவைப் போல, கொள்கை ரீதியாக கட்சியைக் கட்டமைக்க நினைக்கிறார் தளபதி. தவிர, தமிழ்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு, அடிக்கோடிட்டவர் அண்ணாதான் என்பதால், அவரின் மீது மிகுந்த மரியாதை உண்டு.
அடுத்ததாக, கட்சிக் கட்டுப்பாடு என்று பார்த்தால், அதிமுகவைச் சொல்லலாம். எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் கீழ் மட்ட நிர்வாகிகள் வரைக்கும் அப்படியே பின் தொடர்வார்கள். அவர்கள் யாரைக் கை காட்டினாலும் அவர்களைச் ஜெயிக்க வைப்பார்கள். அப்படி கட்சியைக் கண்ட்ரோல் செய்வதில், அதிமுக போல, குறிப்பாக எம்.ஜி.ஆர் போல செயல்படவேண்டும் என்பதே தளபதியின் திட்டம். திரையுலகில் இருந்து வந்து அரசியலில் சாதித்தவர் என்கிற அடிப்படையிலும் எம்.ஜி.ஆரின் மீது தளபதிக்கு ஒரு பற்றுதல் உண்டு” என்றவர்களிடம், திமுக, அதிமுக போன்ற மாற்றுக் கட்சிகளில் இருந்தும் பலர் தவெகவுக்கு வரவிருப்பதாக செய்திகள் வருகிறதே எனக் கேட்டோம்.
அதற்கு பதிலளித்த அவர்கள், “நிச்சயமாக வருகிறார்கள். முன்னாள் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பலர் இணையவிருக்கிறார்கள். திரையுலகப் பிரபலங்களும் இணையவிருக்கிறார்கள். ஆனால், அவர்களைச் சேர்ப்பதிலும் தளபதி சில வழிமுறைகளைக் கடைபிடிக்கிறார். குறிப்பாக, சாதி, மதம் என மக்களைப் பிளவுபடுத்தும் கொள்கைகளைக் கொண்ட யாரையும் சேர்த்துக் கொள்வதில்லை என முடிவெடுத்திருக்கிறார். முக்கியமாக, பாஜகவில் இருந்து வரும் யாரையும் சேர்த்துக் கொள்வதில்லை என கட்சித் தலைமை முடிவு செய்திருக்கிறது” என்கிறார்கள்.