புயல் 3 மணி நேரமாக நகராமல் இருப்பதற்கு காரணம் என்ன? - வானிலை ஆய்வு மையம் விளக்கம்
நிவர் புயல் கடந்த 3 மணி நேரமாக நகராமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்திந்த அவர், “இன்று காலைதான் நிவர் புயலாக மாறியுள்ளது. அதற்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை பொருத்தவரை, நேற்று காலை 25 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. அதன் பின்னர் நேற்று பிற்பகலில் 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்தது. அதையடுத்து 14 கி.மீ வேகத்திலும் இரவு நேரத்தில் 4 கி.மீ வேகத்திலும் நகர்ந்து கொண்டிருந்தது.தற்போது நிலையாக இருக்கிறது.
முதலில் கீழே இருந்தது. தற்போது மேலே நகர்ந்து வருவதால் இலங்கை பகுதியுடன் தொடர்பில் உள்ளது. வேறு ஒரு இடத்தில் தொடர்பில் உள்ளபோதும், புயலின் நிலையில் மாற்றம் நிகழும் போதும் நகர்வில் மாற்றம் இருக்கும். இது இயல்பான ஒன்றுதான். புயல் ஒரே வேகத்தில் நகராது. ஏற்ற இறங்கங்கள் இருக்கக் கூடும். முதலில் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. இப்போது நிலையாக உள்ளது. அதன்பின் தீவிர புயலாக மாற உள்ளது. அதன்பின்னர் மீண்டும் வேகமாக நகரக்கூடும்” எனத் தெரிவித்தார்.