புதுக்கோட்டை: பாரம்பரிய மொய் விருந்து விழாக்கள் களையிழக்க காரணம் என்ன? - அதிர்ச்சியூட்டும் பின்னணி!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் வசிக்கும் சமூகத்தில் பின் தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக முதன் முதலில் இந்த மொய்விருந்து விழாக்கள் தொடங்கப்பட்டது. அது மெல்ல மெல்ல வளர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு,மாங்காடு, மேற்பனைக்காடு, உள்ளிட்ட பகுதிகளிலும் பரவி தற்போது இந்த மொய் விருந்து விழாக்கள் இந்த பகுதி மக்களுக்கு வர்த்தகம் சார்ந்த வாழ்வாதாரமாகவும் மாறிப்போனது.

வட்டி இல்லாத கடனாக ஒரே நேரத்தில் சேரும் பணத்தைக் கொண்டு பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுப்பது படிக்க வைப்பது போர்வெல் அமைப்பது வெளிநாடு செல்வது புதிய தொழில் தொடங்குவது உள்ளிட்டவைகளுக்கு பெரும் உதவியாக அமைந்தது இந்த மொய் விருந்து விழாக்கள் தான். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதிகளில் தற்போது நடைபெற்று வரும் மொய் விருந்து விழாக்களில் நாள்தோறும் பல லட்சங்கள் குவியத் தொடங்கியுள்ளன.
கடந்த ஆண்டு ரூ.500 கோடி வரை மொய் பணம் வசூலான நிலையில் இந்த ஆண்டு அதைவிட கடந்து அதிக அளவிலான வர்த்தகமும் பண பரிவர்த்தனையும் நடைபெறும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் மொய் விருந்து விழா ஏற்பாட்டாளர்கள். ஆனால், கஜா புயல் ஏற்படுத்திய பெரும் பாதிப்பு மற்றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் உருக்குலைந்து போனதால் அதிலிருந்து மொய்விருந்து விழாக்கள் சரிவை சந்திக்கத் தொடங்கி விட்டதாகவும், இதனால் மொய் விருந்து விழாக்களும் கலையிழக்கத் தொடங்கி விட்டதாகவும் விழா ஏற்பாட்டாளர்கள் வேதனையோடு தெரிவித்தனர்.

வழக்கமாக ஆடி மாதம் தொடங்கும் மொய் விருந்து விழாக்கள் இந்த ஆண்டு ஆனி மாதம் முதலே தொடங்கி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இது ஆடி மாதத்தில் இன்னும் அதிகரித்து ஆவணி மாதத்தில் நிறைவடையும் எனக் கூறும் விழாதாரர்கள் இந்த ஆண்டும் ரூ.500 கோடியை தாண்டி மொய் விருந்து விழாக்கள் சார்ந்த வர்த்தகமும் பண பரிவர்த்தனையும் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.