புதுச்சேரி | ஒரே நொடியில் தரைமட்டமான வீடு... கழிவுநீர் வாய்க்காலில் பள்ளம் தோண்டியதுதான் காரணமா?

கழிவுநீர் செல்லும் வாய்க்கால் தடுப்பு சுவர் அமைக்க பொக்லைன் கொண்டு பள்ளம் தோண்டியதால் விபத்து ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடிந்த வீடு
இடிந்த வீடுPT

செய்தியாளர் ரஹ்மான்

-----

புதுச்சேரியில் புதுமனை புகுவிழாவிற்காக காத்திருந்த 3 மாடி வீடு சீட்டுகட்டு போல் நேற்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கழிவுநீர் செல்லும் வாய்க்காலுக்கு தடுப்பு சுவர் அமைக்க பொக்லைன் கொண்டு பள்ளம் தோண்டியதால் விபத்து ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி நகரின் மத்தியில் பேருந்து நிலையத்திலிருந்து கடற்கரைக்கு செல்லும் மறைமலை அடிகள் சாலையில் உள்ளது ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகர். இப்பகுதியையொட்டி நகரின் மிக முக்கிய பகுதிகளில் இருந்து கழிவு நீரை கடலுக்கு கொண்டு செல்லும் உப்பனாறு வாய்க்கால் அமைந்துள்ளது.

வீட்டின் உரிமையாளர்
வீட்டின் உரிமையாளர்

இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றார் சாவித்திரி. கணவர் ரங்கநாதன் உயிரிழந்த நிலையில், இவர் தனது மகள் சித்ரா மற்றும் மருமகன் சுரேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர்கள் அதே பகுதியில் அரசு இலவசமாக கொடுத்த வீட்டுமனைப் பட்டா இடத்தில் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை கொண்டும், கடன் வாங்கியும் மூன்று மாடி வீடு கட்டி வந்தனர். இந்த வீட்டின் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முடிந்த நிலையில், அடுத்த மாதம் வீட்டின் புதுமனை புகுவிழா நடத்த சாவித்திரி திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் அந்த வீட்டின் அருகே செல்லும் உப்பனாறு வாய்காலுக்கு பக்கவாட்டு சுவர் கட்டும் பணி கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வருகிறது. அதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவித்திரி வீட்டருகே வாய்கலுக்கு சுவர் கட்டுவதற்காக பொக்லைன் கொண்டு ஆழமாக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி வீடு ஆட்டம் காண ஆரம்பித்து சாய்ந்து காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சாவித்திரி இதுதொடர்பாக வாய்கால் சுவர் கட்டும் ஒப்பந்ததாரரிடம் முறையிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று வீடு மிக மோசமாக சாய்ந்தவாரு காணப்பட்டதை தொடர்ந்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர், ஆகியோர் வீட்டின் தரத்தை ஆய்வு செய்ய வந்து பேசிகொண்டிருந்தபோது வீடு திடீரென முற்றிலுமாக சீட்டுக்கட்டுப்போல் சரிந்து விழுந்தது. அப்போது அங்கு இருந்தவர்கள் தப்பி ஓட்டம் பிடித்ததால் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர் சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை.

இருப்பினும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி, அப்பகுதி முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகன் தலைமையில் மறைமலை அடிகள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் லெட்சுமி நாராயணன் விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்து விட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததால் மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து புதியதலைமுறைக்கு பேட்டியளித்த புதுச்சேரியின் பொதுப்பணித்துறை அமைச்சர் லெட்சுமி நாராயணன், “பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மாற்று ஏற்பாடு உடனே செய்து தரப்படும். பிறகு விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com