நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நிலவரம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், "உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. மத்திய அரசின் முயற்சியிலேயே இந்திய மாணவர்கள், திரும்ப அழைத்து வரப்படுகின்றனர். இதில் தமிழ்நாடு அரசு பயணச் செலவை ஏற்கிறேன் என்று சொல்வது எந்த அளவுக்கு சரியென்று தெரியவில்லை" என தெரிவித்தார்
மேலும், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் மறைமுக தேர்தல் நிலைப்பாடு குறித்து பேசிய அவர், "10 மாத ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் பாஜக வென்று, 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
மறைமுகத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ள இடங்களில், அவர்களே தலைவர் பதவிகளுக்கு போட்டியிடுவர். பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத இடங்களில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை கட்சி முடிவு செய்யும்" என தெரிவித்துள்ளார்