நெகிழி பொருட்களை ஒழிக்க என்ன திட்டம் உள்ளது? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

நெகிழி பொருட்களை ஒழிக்க என்ன திட்டம் உள்ளது? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
நெகிழி பொருட்களை ஒழிக்க என்ன திட்டம் உள்ளது? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

நெகிழியை முழுமையாக தடை செய்யும் திட்டம் உள்ளதா அல்லது உற்பத்தியை அனுமதித்து, புழக்கத்தில் விட்டபிறகு மேலாண்மை செய்வதற்கு மட்டும் திட்டம் உள்ளதா என மத்திய மாநில அரசுகள் இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நெகிழி தடை உத்தரவை அமல்படுத்த பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நெகிழி உற்பத்தியாளர்கள் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் எஸ்.வைத்திய நாதன் மற்றும் பி.டி.ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் பாட்டில்களை திரும்ப பெறுவது போல பிளாஸ்டிக் பாட்டில்களையும் திரும்ப பெறலாம் என்றும், அதன்மூலம் மீண்டும் பயன்பாட்டிற்கு வராமல் தடுக்க முடியும் என யோசனை தெரிவித்தனர்.

விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் நெகிழி பயன்படுத்தக் கூடாது போன்ற ஆலோசனைகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல்துறை மூலம் வழங்கி, கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் தெரிவித்தனர். நெகிழி பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்தும் வகையில், மாற்று பொருட்களை பயன்படுத்தும்படி ஆலோசனைகளை வழங்கலாம் என்றும் மத்திய, மாநில அரசு தரப்பிடம் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மஞ்சப்பை திட்டம் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாற்று பொருட்கள் குறித்தும் ஆலோசிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். தமிழக அரசு தரப்பில் நெகிழி பொருட்களை தவிர்க்கும்படி பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது மத்திய அரசு தரப்பில் நெகிழியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உணர்வதாகவும், முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுத்துவருவதாகவும், நெகிழியும் உடலுக்கு தீங்கு இழைக்கக் கூடியதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், நெகிழி கழிவுகள் மேலாண்மை விதிகள் மட்டும் தான் அமலில் உள்ளதே தவிர, நெகிழி கழிவுகளை அழிப்பதற்கான விதிகள் ஏதும் இல்லை என்றும் சுட்டிக் காட்டினர்.

நீலகிரி மாவட்டத்தில் நெகிழி பாட்டில்கள் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நெகிழி பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படுவதை யார் உறுதி செய்வார்கள் என்றும், யார் பொறுப்பான அதிகாரி எனவும் தெரிவிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து, நெகிழியை முழுமையாக தடை செய்யும் திட்டம் உள்ளதா அல்லது உற்பத்தியை அனுமதித்து விட்டு, அதை புழக்கத்தில் விட்டபிறகு மேலாண்மை செய்வதற்கு மட்டும் திட்டம் உள்ளதா என மத்திய மாநில அரசுகள் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com