ரூ.10 கோடி அபராதத்தை கட்ட மறுத்தால் சசிகலாவிற்கு என்ன தண்டனை?
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள ரூ.10 கோடி அபராதத்தை செலுத்த தவறினால் அவர் கூடுதலாக 13 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் என்று சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
‘சசிகலா நடராஜன் மீது உச்சநீதிமன்றம் சுமத்திய ரூ.10 கோடி அபராதத்தை செலுத்த தவறினால், அவரது சிறை தண்டனை நீட்டிக்கபடும். அவ்வாறு தவறும் பட்சத்தில், அவர் 13 மாதங்கள் கூடுதலாக சிறையில் இருக்க வேண்டும்’ என சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட சசிகலா, 3 ஆண்டு 11 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும். இதற்கு முன்னர், சசிகலா செப்டம்பர் 2014-ல் இதே வழக்கில் பரப்பன அக்ரஹார சிறையில் 21 நாட்கள் தண்டனை காலத்தை அனுபவித்தார். வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்ட பின்னர் ஜாமீன் பெற்றிருந்தார்.